சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக காவல்துறையினருக்கும்,தமிழக மக்களுக்கும் கவர்னர் பாராட்டு

சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக காவல்துறையினருக்கும்,தமிழக மக்களுக்கும் கவர்னர் பாராட்டு

வியாழன் , டிசம்பர் 08,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவின் போது அமைதி காத்த தமிழக மக்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன ராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் உணர்ச்சி பெருக்குடன் கூடிய சூழ்நிலையில், ராஜாஜி அரங்கில் அரசு எந்திரம் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தது. அங்கே பொதுமக்கள் அஞ்சலிக்காக மாண்புமிகு அம்மா அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசு எந்திரம் ஈடு செய்ய முடியாத கடமையுணர்வுடன் மெரினா கடற்கரையில் இறுதி சடங்கிற்கான  ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொண்டிருந்தது. அனைத்து துறையினரும் இணைந்த உரிய நடவடிக்கை இல்லாமல் கடல் போல திரண்ட மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க முடியாது.சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக மக்களுக்கு பாராட்டுக்கள்.

அரசுத்துறை, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், 9 மாநில முதல்வர்கள், அயல் நாட்டு பிரதிநிதிகள் உள்பட நாட்டின் அனைத்து முக்கிய வி.வி.ஐ.பிக்களையும் வரவேற்பதில் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டது. கடுமையாக பணியாற்றியதை அங்கீகரிப்பதற்கு இதைவிட சிறந்த தருணம் இல்லை. தமிழக அரசின் முதன்மைச்செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் அவரது அதிகாரிகள் குழுவினர் மிகவும் உன்னதமாக குறிப்பிடப்பட வேண்டியவர்களாக உள்ளனர் .

இதே போன்று, அரசு அதிகாரிகள், அலுவலர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் சிறப்பாக பணியாற்றியதாகவும், காவல்துறையினரின் பணியும் ஈடு இணையற்றது எனவும் ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.