சட்டையை தானே கிழித்து கொண்டு நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின் : எம்.பி.நவநீதகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சட்டையை தானே கிழித்து கொண்டு நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின் : எம்.பி.நவநீதகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை : தனக்கு தானே சட்டையை கிழித்து கொண்டு நாடகம் ஆடுகிறார் என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மீது அ.தி.மு.க எம்.பி.நவநீதகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார் அ.தி.மு.க மாநிலங்களவை குழுத்தலைவர் நவநீதக்கிருஷ்ணன்.

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த தீர்மானத்தில் அமைதியாக இருந்து வாக்குகளை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டதால் இரண்டு முறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது,. சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பளித்தார், அவர் விதிப்படியும் முறைப்படியும் நடந்து கொண்டார்.  அவருடைய அதிகாரத்தின் படி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எவ்வளவு அவமானப்படுத்தினாலும் ஒத்திவைக்காமல் சபையை நடத்தினார்.

இதில் மு.க.,ஸ்டாலின் சட்டையை யாரும் கிழிக்கவில்லை.தானாகவே சட்டையை கிழித்து கொண்டார். வேண்டுமென்றே சட்டையை கிழித்து கொண்டு நாடகம் ஆடுகிறார். சட்டசபையில் அதிமுகவை தோற்கடிக்க அவருக்கு தெம்புமில்லை. திராணியுமில்லை. இப்போது திமுக நடத்த இருக்கும் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறாது. இப்போது தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி விட்டது, பொய் சொல்வது யார் உண்மை சொல்வது யார் என்பது தெரிந்து விடும்.

சபாநாயகர் நாற்காலியில் இரண்டு திமுக எம்எல்ஏக்கள் உட்காரலாமா? அவரது நாற்காலியை உடைக்கலாமா? இதுபோன்ற மனப்போக்கை திமுக மாற்றி கொள்ள வேண்டும். மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்களிடம் வழக்கம் போல் செல்லாக்காசாகி விடுவார்கள்.

ஒ.பி.எஸ் உள்ளிட்டவர்கள் வாக்களித்தது சட்டசபையில் நடைபெற்ற விவகாரம். இது குறித்து சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும்.  இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒ.பி.எஸ்சின் சாயம் வெளுத்து விட்டது. அவர் தி.மு.க.வுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டது மக்களுக்கு தெரிந்து விட்டது. இவ்வாறு நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.