சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நிறைவேற்றம் – முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நிறைவேற்றம் – முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளின் குடிநீர் தேவை, யானை தடுப்பு அகழிகள் மற்றும் வனக்குழு மேம்பாட்டு கடன் வசதி என சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏராளமான பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி இருப்பதால், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி ஆயிரத்து 455 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். அடர்ந்த வனம் மற்றும் மலை சார்ந்த இப்பகுதி, சத்தியமங்கலம், ஆசனூர் ஆகிய இரண்டு வனக்கோட்டங்களை உள்ளடக்கியதாகும். இவற்றில் சோழர், இருளர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகளின் உறைவிடமாக இருப்பதால், 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு பகுதியை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, புலிகள் காப்பகமாக அறிவித்து நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் அதற்கேற்ப அப்பகுதியில் வேட்டைத் தடுப்பு பணியை மேற்கொள்ள புதிய வேட்டைத் தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3 ஆயிரம் ரூபாயாக இருந்த அவர்களின் மாத வருமானத்தை, 6,750 ரூபாயாக உயர்த்தியதோடு, காலணிகள், சீருடைகள், மழைக்கோட்டுகள் மற்றும் வனக்குழு மேம்பாட்டு கடன் ஆகியவற்றை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். இதுமட்டுமின்றி வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க, தலமலை, தாளவாடி உள்ளிட்ட வனச்சரகங்களில் 100 கிலோமீட்டர் தொலைவு வரை யானை தடுப்பு அகழிகள் வெட்டப்பட்டன. வேட்டை தடுப்பு முகாம்களும் ஏற்படுத்தப்பட்டன.

வனவிலங்குகளால் ஏற்பட்ட பயிர்ச்சேதம் மற்றும் உயிர்ச் சேதங்களுக்காக சுமார் 2 கோடி ரூபாய் வரை முதலமைச்சர் செல்வி ஜெயலிலதா இழப்பீடு தொகை வழங்கியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளுக்காக சத்தியமங்கலம் பகுதி மக்களும், வன ஊழியர்களும் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாட்டின் வளம் என்பது அதன் இயற்கை வளத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அதனை நன்கு உணர்ந்து, அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்டிருப்பதை யாராலும் மறுக்க இயலாது.