சமுதாயத்தில் உயரிய அங்கீகாரம் கிடைக்க செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது

சமுதாயத்தில் உயரிய அங்கீகாரம் கிடைக்க செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில்  நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது

புதன், டிசம்பர் 23,2015,

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் உயரிய அங்கீகாரம் கிடைக்க, பல்வேறு சிறப்புத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திண்டுக்கல்லில் நடைபெற்ற சட்ட உதவி முகாமில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட சமரச தீர்வுமையத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் கலந்துகொண்டு பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி பூர்ணிமா, 3ம் பாலினத்தை சேர்ந்த திருநங்கைகள், சிறந்த கல்வியை பெற்று சமுதாயத்தில் உயர் பதவிகளில் அமர்ந்து, அனைத்து சமூக மக்களைப் போல வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

திருநங்கைகள் தங்களுக்கு எதிரான சமூக விரோத நடவடிக்கைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்தும் நீதிபதி விளக்கமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சரவணன், பொதுமாக திருநங்கைகளுக்கு எதிராக பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

குடும்பத்தில் இருந்து திருநங்கைகள் விலக்கி வைக்கப்படுவதாலேயே பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் ஆளாகி வருவதாக தெரிவித்த காவல் கண்காணிப்பாளர், குடும்ப உறுப்பினர்களுடன் திருநங்கைகள் சேர்ந்து வாழும் வகையில் விரைவில் கலந்தாய்வு முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்ட திருநங்கைகள், சமூகத்தில் சராசரி மனிதர்களுக்கு கிடைக்கும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தங்களுக்கும் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவையடுத்து, முதன்முறையாக பணிநியமனம் பெற்று திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் எஸ்.குணவதி, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் ஆட்சிக்காலங்களில் தான் திருநங்கைகளுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்து வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மூன்றாம் பாலினத்தினர் என்று புறந்தள்ளாமல் அவர்களது வாழ்க்கையிலும் ஒளிவிளக்கு ஏற்றி, தன்னம்பிக்கை பெறும் வகையில் அரசுப் பணி உள்ளிட்ட பல்வேறு சிறப்புத்திட்டங்களை தாயுள்ளத்துடன் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை தங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாது என திருநங்கைகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.