சம்பா சாகுபடிக்காக ரூ.64.30 கோடி மானியம்,நடவு இயந்திரத்துக்காக ஏக்கருக்கு ரூ.2000 ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சம்பா சாகுபடிக்காக ரூ.64.30 கோடி மானியம்,நடவு இயந்திரத்துக்காக ஏக்கருக்கு ரூ.2000 ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2016,

சென்னை : காவிரியில் போதுமான தண்ணீர் இல்லாததால் நேரடி நெல் சாகுபடி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், சம்பா சாகுபடிக்காக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

விவசாயிகள் நெல் விதைப்பு மேற்கொள்வதற்காக தரிசு உழவுப் பணிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும் என்றும், விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகள் பெற ஏதுவாக விதைகளுக்கு கிலோ ஒன்றுக்கு, பத்து ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும்,  இயந்திர முறையில் நெல் விதைப்பு மேற்கொள்ள ஏக்கர் ஒன்றுக்கு 600 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ்  முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.,

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குவது காவேரி டெல்டா பகுதி. இந்தப் பகுதியின் ஜீவ நாடியாக உள்ளது காவேரி நதிநீர். கர்நாடக மாநிலத்துடன் நமக்குள்ள காவேரி நதிநீர் பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பிரச்சனையாகும். 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, காவேரி நதிநீர் பிரச்னைக்காக நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. காவேரி நீர்ப்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது. அதில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டது. நடுவர் மன்றத்தை அமைக்குமாறு 1990-ம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி   எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு  உயிரூட்டப்பட்டு, காவேரி நடுவர் மன்றம் 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. 1991–ம் ஆண்டு இடைக்கால ஆணையை வழங்கிய காவேரி நடுவர் மன்றம், பின்னர் தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று வழங்கியது. இந்த ஆணையினை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிடவில்லை. உச்சநீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட சட்டப்போரின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற உத்தரவின்படி, மத்திய அரசு காவேரி நடுவர் மன்ற ஆணையை 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி  மத்திய அரசிதழில் வெளியிட்டது. எனினும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு  ஆகியவற்றை மத்திய அரசு இன்னமும் அமைக்காத காரணத்தால் காவேரி நீரில்  நமக்குரிய பங்கை கர்நாடகா அரசு விடுவிப்பதில்லை.

எனவே, இந்த அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசால், 2013-ம் ஆண்டே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை  இன்னமும் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் உச்சநீதிமன்றம் நீண்ட கால  நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வுகளை  ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் காவேரி வழக்கும் ஒன்றாகும். உச்சநீதிமன்றத்தின் சிறப்பு  அமர்வின் முன் காவேரி பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் 28.3.2016-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி  விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றம் இவ்வழக்குகளை 2016-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி  பட்டியலிடும்படி ஆணையிட்டது. பின்னர் இந்த வழக்கு.2016-ஆம் ஆண்டு அக்டோபர் 18 ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

காவேரி நடுவர் மன்ற ஆணையின்படி, ஒரு பாசன ஆண்டானது ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ள காலமாகும். நடப்புப் பாசன ஆண்டில், கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி நீரை விடுவிக்காததால், எனது ஆணையின் பேரில் தலைமைச் செயலாளர்  கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் 30.7.2016 அன்று அனுப்பிய கடிதங்களில், ஏற்கெனவே 1.6.2016 முதல்  26.7.2016 வரையில் ஏற்பட்ட குறைபாட்டு நீர் அளவான 22.934 டிஎம்சி அடி நீரை விடுவிக்க வேண்டும் எனவும், இனி வரும் மாதங்களில் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, நீரை விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. எனினும், கர்நாடக  அரசிடமிருந்தோ, மத்திய அரசிடமிருந்தோ இதுவரையில் எந்த வித பதிலும் வரப் பெறவில்லை.

கர்நாடக அரசின் நான்கு பெரிய நீர்த்தேக்கங்களான, ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகியவற்றின் மொத்த நீர்க்கொள்ளளவு 114.571 டிஎம்சி அடியாகும். இவைகளில், 17.8.2016 அன்றைய நிலவரப்படி 64.849 டிஎம்சி அடி நீர் இருப்பு உள்ளது. கர்நாடக அரசு இந்த நான்கு அணைகளிலிருந்து அதன் பாசனத்திற்காக நீரை தொடர்ந்து விடுவித்து வருகிறது. மேட்டூர் அணையில், 17.8.2016 அன்றைய நிலவரப்படி 27.560 டிஎம்சி அடி நீர் தான் இருப்பு உள்ளது. காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி,  கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்க முன்வராத நிலையில்,  தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை பெற்றிட உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு  ஒன்றினை, விரைவில் தாக்கல் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த இடைக்கால மனு  இன்னும் ஒரிரு தினங்களில் தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர், உச்சநீதிமன்றத்தின்  மூலம் உரிய ஆணைகள் பெறப்பட்டு, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி நமக்குரிய பங்கினைப் பெற்றிடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இல்லாததால் குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விட இயலவில்லை. நடப்பு கோடை பருவத்தில் 6 டெல்டா  மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்ததால் நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி  மேற்கொள்ள ஏதுவாக 54 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடித் திட்டம் ஒன்றை 1.6.2016 அன்று நான் அறிவித்தேன். இதன் காரணமாக, கணிசமான பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இயல்பான பருவமழை மற்றும் மேட்டூர் அணைக்கு தேவையான நீர் கிடைக்கப்பெறும்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிர் சுமார் 14 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நாற்று நடவு முறை மூலம் சாகுபடி செய்யப்படும். நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, உச்சநீதிமன்றத்தில் நமக்கு சாதமான தீர்ப்பினைப் பெற்று, சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்க முடியும் என நான் நம்புகிறேன். எனினும், ஒரு நல்ல அரசு என்பது எத்தகைய இடர்ப்பாடுகளையும் எதிர்கொள்ளும் வகையில் திட்டங்களை செயல்படுத்தக் கூடிய அரசாக இருக்க வேண்டும். எனவே,எதிர்வரும் வடகிழக்கு பருவமழையிலும், குறைவான மழை மற்றும் நமக்குத் தேவையான அளவு தண்ணீர் மேட்டூர் அணையில் கிடைக்கப் பெறாத சூழ்நிலையிலும், டெல்டா விவசாயிகள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என்பதால், சம்பா சாகுபடிக்கென ஒரு சிறப்பு திட்டத்தை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தும்என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாத இறுதிக்குள் சம்பா பயிருக்குத் தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் கிடைக்கப் பெறவில்லை எனில், நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு ஒரு தொகுப்பு திட்டத்தை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தும்.
இதன்படி,

1) விவசாயிகள் நெல் விதைப்பு மேற்கொள்வதற்காக தரிசு உழவுப் பணிகளுக்கு மானியம் வழங்கப்படும். ஏக்கர் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் இந்த மானியம் வழங்கப்படும். இதற்கென 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2) விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகள் பெற ஏதுவாக விதைகளுக்கு கிலோ ஒன்றுக்கு, பத்து ரூபாய் மானியம் வழங்கப்படும். இதற்கென 4 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3) இயந்திர முறையில் நெல் விதைப்பு மேற்கொள்ள ஏக்கர் ஒன்றுக்கு 600 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும். இதற்கென 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
4) நேரடி நெல்விதைப்பு மேற்கொள்ளப்படும் இடங்களில், களை பாதிப்பு அதிகளவு இருக்கும் என்பதால் களைக்கொல்லி மருந்து தெளிக்க, ஏக்கருக்கு 280/- ரூபாய் மானியம் வழங்கப்படும். இதற்கென 9 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
5) நடவு இயந்திரம் மூலம், நடவு மேற்கொள்ளப்படும் இடங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 2000/- ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும். இதற்கென 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
6) துத்தநாகச் சத்து குறைபாட்டினால் நெல்மகசூல் குறையும் என்பதால், இத்தகைய குறைபாடுள்ள வயல்களில், துத்தநாக சல்பேட்  பயன்படுத்தஏக்கருக்கு 200 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மொத்தத்தில் போதுமான தண்ணீர் கிடைக்காத நிலையில், நேரடி நெல் சாகுபடி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், நான் தற்போது தெரிவித்தபடி, சம்பா சாகுபடிக்காக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.  இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.