சாயக்கழிவுகளை சுத்திகரிக்க ஒருங்கிணைந்த சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது

சாயக்கழிவுகளை சுத்திகரிக்க ஒருங்கிணைந்த சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது

செவ்வாய், டிசம்பர் 01,2015,

நாமக்கல், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் சாயக்கழிவுகளை சுத்திகரிக்க ஒருங்கிணைந்த சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்ததன் அடிப்படையில், அந்தத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. P. தங்கமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி. கோகுலஇந்திரா மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாச்சலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாமக்கல், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையங்களை விரைவில் அமைப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறும், சாயமேற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் வகையில், தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தின் திட்ட அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவும் இதில் அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. கி. ஸ்கந்தன், நிதித் துறையின் முதன்மை செயலர் திரு. க. சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளர் திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளிட்டோரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உயர் அதிகாரிகள், தமிழ்நாடு நீர் முதலீட்டு கழக நிறுவனத்தின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.