சிறுவாணியில் கேரளா அணை கட்டுவதை தடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சிறுவாணியில் கேரளா அணை கட்டுவதை தடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிறு, செப்டம்பர் 04,2016,

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநில அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டமிட்டு இதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. சிறுவாணியில் அணை கட்டினால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும், விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கேரளாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவின் அணை கட்டும் முயற்சியை தடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா முன்பு கடிதம் எழுதினார். மேலும், சிறுவாணி அணை பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளார். அதில், தமிழ்நாடு அரசு மற்றும் காவேரி நடுவர் மன்றத்தின் இசைவு பெறாத நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் 96-வது கூட்டத்தில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கு நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்கான பரிந்துரை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

இந்த தீர்மான நகலுடன் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய சுற்றுச்சூழல் துறை அவசரகதியாக அளித்த அனுமதியை ஏற்கக் கூடாது. அது தமிழக அரசின் அனுமதியை கேட்காமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் கழகத்தின் அனுமதியையும் பெறவில்லை என முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பகுதியில் கேரளா அணைக்கட்டுவதற்கு நிபுணர்குழு அளித்த பரிந்துரை தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது. காரணம் இது அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவாகும். எனவே இந்த விஷயத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.