சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 15 , 2017 ,செவ்வாய்க்கிழமை, 

சென்னை : நாட்டின் 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார். பின், அவரது உரையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
முதலமைச்சர் தனது சுதந்திர தின உரையில் பேசியதாவது:-

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக தனது இன்னுயிரை துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாக செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நம் தமிழ்நாடு. வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே, அடிமை விலங்கை தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமையும் பெற்றது நம் தமிழ்நாடு. நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தங்களின் சொந்த நலன்களைக் சிறிதும் சிந்திக்காமல் நாட்டு விடுதலைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அந்த தியாகச் செம்மல்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 13 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும், விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, நாட்டிற்காக குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதையும், மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் பெற்ற சுதந்திரத்தை பேணி காக்கவும், இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், அதில் தமிழ்நாட்டை வளம் மிக்க மாநிலமாக ஆக்கவும் இந்த அரசு தொடர்ந்து செயல்படும் என உறுதியளிக்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.