சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடம் : “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு, புள்ளி விவரங்களுடன் தகவல்

சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடம் : “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு, புள்ளி விவரங்களுடன் தகவல்

சனி, ஜூலை 02,2016,

பிரபல சுற்றுலா தலங்களான கோவா, கேரளா ஆகிய மாநிலங்களைக் காட்டிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதாக பிரபல ஆங்கில நாளேடு ஒன்று புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளது. “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தமிழகத்திற்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களைக் காட்டிலும், சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடம் வகிப்பதாக இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 46.8 லட்சம் என்றும் அதற்கு முந்தைய ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 46.6 லட்சம் என்றும் தெரிவித்துள்ள இந்நாளேடு, உள்நாட்டு பயணிகளின் வருகையை பொறுத்தவரை 2013-ம் ஆண்டிலிருந்து தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. 2015-ம் ஆண்டில் நாடு முழுவதிலும் இருந்து 33.35 லட்சம் இந்தியர்கள் தமிழகத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா, தமிழகத்தை அடுத்து 2-வது இடத்திலும், உத்தரப்பிரதேசம் 3-வது இடத்திலும் உள்ளன. நாட்டின் தலைநகரான டெல்லி 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 10 மாநிலங்கள் கடந்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 88.4 சதவீதத்தினரை ஈர்த்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.