மனநல மருத்துவர் டாக்டர் சாரதா மேனனுக்கு அவ்வையார் விருதை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

மனநல மருத்துவர் டாக்டர் சாரதா மேனனுக்கு அவ்வையார் விருதை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

புதன், ஜூலை 20,2016,

சென்னை: முதல்வர் ஜெயலலிதா,தலைமைச் செயலகத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் மற்றும் மறுவாழ்விற்காக சேவை ஆற்றி வரும் அரசு மனநல மருத்துவ நிலையத்தின் முன்னாள் தலைவரும், SCARF தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்-ஆலோசகருமான டாக்டர் எம். சாரதா மேனனுக்கு 2016-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை நேற்று வழங்கினார்.

பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி “அவ்வையார் விருது” 2012-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர் எம். சாரதா மேனன் அவர்கள் 3 வருடம் பயில வேண்டிய மனோதத்துவ நிபுணர் படிப்பை 2 வருடங்களில் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் முடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். டாக்டர் எம். சாரதா மேனன் அவர்கள் நாட்டிலேயே முதல் பெண் மனநல மருத்துவரும், பத்ம பூஷண் விருது உட்பட பல விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். 1961-ஆம் ஆண்டு சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் மென்டல் ஹெல்த்தில் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்து, அவரது தலைமையில் மருத்துவமனையின் ஆய்வுக் கூடம், கட்டட அமைப்புகளை மேம்படுத்தி Occupation Therapy Unit-ஐ சீர்செய்து நோயாளிகளுக்கு புதிய தொழிற்பயிற்சி அளித்துள்ளார். மேலும், அவர் நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் விளையாட்டு தினம் நடத்தியதோடு, மனநோயாளிகள் செய்யும் கைவினைப் பொருட்களை கண்காட்சியில் வைத்து, அதன்மூலம் மருத்துவமனைக்கு நிதி திரட்டியுள்ளார்.

மனநோயாளிகளின் நல்வாழ்விற்காக 1984-ஆம் ஆண்டு SCARF என்ற தொண்டு நிறுவனத்தை டாக்டர் எம். சாரதா மேனன் அவர்கள், மனநோயாளிகளுக்கு தற்காலிக தங்கும் இடவசதி, மேம்படுத்தப்பட்ட மனநல சிகிச்சை முறைகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி அளித்து வருகிறார். 2016-ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கு முதல்வர் ஜெயலலிதாவார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் எம். சாரதா மேனனுக்கு அவரது சிறந்த சமூக சேவையினை பாராட்டி அவ்வையார் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசால் 2.3.2016 அன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மனநல மருத்துவர் டாக்டர் சாரதா மேனனுக்கு ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் அவ்வையார் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

அப்போது, ஜெயலலிதா, “இந்த விருதினை நீங்கள் பெற்றுக் கொள்வதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களது சேவைக்கு ஆதரவு அளிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் நீண்ட நெடுநாட்கள் ஆரோக்கியத்துடன் இருந்து, இந்த சேவையை தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என சாரதா மேனனை வாழ்த்தினார்.

முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அவ்வையார் விருதினை பெற்றுக் கொண்ட டாக்டர் சாரதா மேனன், தனது சமூக சேவையினை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.