சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தோட்டக்கலைத் துறைக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அவரவர் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை அவரவர் வீட்டு மாடியிலே தோட்டம் அமைத்து பயிரிடும் வகையில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் வீட்டு மாடிகளில் காய்கறி தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறையில் 500 ரூபாய் கட்டினால் தென்னை நாரின் கழிவுகள் அடைத்து பயிரிடுவதற்கு ஏற்ற வகையிலான 6 பெரிய பைகளுடன் தக்காளி, கத்தரி, மிளகாய் பல வகையான செடிகளும், வெண்டை, முள்ளங்கி, கீரை வகைகள் போன்ற 7 பாக்கெட் விதைகளும் தருவார்கள். இதுதவிர விஷமில்லாத இயற்கை உரம், இயற்கை பூச்சி மருந்தும் தருவார்கள்.

இந்த பைகளில் காய்கறி, கீரை வகைகளை பயிரிட்டால் ஒரு சில நாட்களில் இருந்து தொடர்ந்து வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பெற முடியும்.

இந்த வகை காய்கறிகள் தோட்டங்களை சென்னையில் இதுவரை 15 ஆயிரத்து 141 பேர் அமைத்து விட்டார்கள். கோயம்புத்தூரில் 5,260 பேர் அமைத்து விட்டார்கள். விரைவில் திருச்சி, மதுரையிலும் இந்த திட்டத்தை தொடங்க முதல்–அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்ற முதல்–அமைச்சரின் ஆணையை செயல்படுத்தும் வகையில் சென்னையில் தோட்டக்கலைத்துறை மாநகராட்சியுடன் இணைந்து 110 இடங்களில் விரைவில் இந்த பைகள், விதைகள் செடிகளை வழங்கும் பணிகளை தொடங்கும்.