சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீரானது; தமிழக அரசு தகவல்

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீரானது; தமிழக அரசு தகவல்

திங்கள் , டிசம்பர் 07,2015,

சென்னை,

சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வெள்ளம் அகற்றப்பட்ட மற்றும் வடிந்து வரும் பகுதிகளில் படிப்படியாக மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீராகிவிட்டதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மின்வினியோகம் சீரடைந்தது;

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் மேற்கு சென்னை பகுதியில் உள்ள துணைமின்நிலையங்களில் மழை நீர் சூழ்ந்ததால் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டதால் மின்வினியோகம் சீரடைந்து உள்ளது.

குறிப்பாக 110 கிலோவாட் திறன் கொண்ட கிண்டி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய துணைமின்நிலையங்கள் மற்றும் 33 கிலோவாட் திறன் கொண்ட சைதாப்பேட்டை, அண்ணாசாலை, கொடுங்கையூர் துணைமின்நிலையங்களில் இருந்து மீண்டும் மின்வினியோகம் தொடங்கி உள்ளது. இதுதவிர 36 கிலோவாட் திறன் கொண்ட 300 டிரான்ஸ்பார்மரில் இருந்தும் மீண்டும் மின்வினியோகம் செய்யப்படுகிறது.

அதன்படி மணலி, நாப்பாளையம், எம்.கே.பி.நகர், சிட்கோ நகர், முடிச்சூர், அனகாபுத்தூர், பொழிச்சலூர், மேற்கு தாம்பரம், புளியந்தோப்பு, நந்தனம், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மாஞ்சேரி, ஆர்.ஆர்.காலனி, எம்.எம்.டி.ஏ. அரும்பாக்கம், ஆலப்பாக்கம், மேற்கு மாம்பலம், ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் சீரடைந்து உள்ளது.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.