சென்னையில் மேலும் 31 அம்மா உணவகங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னையில் மேலும் 31 அம்மா உணவகங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சனிக்கிழமை, ஜனவரி 30, 2016,

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்ட 31 அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான திருவொற்றியூர், திரு.வி.க.நகர், இராயபுரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் 8 கோடியே 25 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 31 அம்மா உணவகங்கள்; ஜெ.ஜெ. நகர் – பாடிக்குப்பம் சாலையில் 1 கோடியே 44 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பெட்டக வடிவ பாலம்; மணலியில் 4 கோடியே 96 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள லாரிகள் நிறுத்தும் நிலையம்; கொரட்டூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம்; சின்ன கொடுங்கையூர் – சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் மாதவரம், குளக்கரை –சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 1 கோடியே 61 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்; சென்னை மாநகராட்சியின் அனைத்து சமுதாய கூடங்களின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாத்திரங்கள், மேஜைகள், நாற்காலிகள் வழங்குதல்; மேற்கு முகப்பேர், ஆயிரம் விளக்கு -கிரியப்பா சாலை, மற்றும் சோழிங்கநல்லூர் – கஜராஜன் சாலை ஆகிய இடங்களில் 6 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 3 சமுதாயக் கூடங்கள்; சென்னை மாநகராட்சியின் சார்பில் மாடம்பாக்கத்தில் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை; 1 கோடியே 64 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 அங்கன்வாடி மையங்கள்; 1 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4 உடற்பயிற்சி கூடங்கள்; 4 கோடியே 53 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 9 பூங்காக்கள்; 1 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு பகுதி மற்றும் மூன்று வார்டு அலுவலகக் கட்டடங்கள்; வள்ளூவர் கோட்டம் நெடுஞ்சாலையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடம்; வேளச்சேரி பிரதான சாலை – சைதாப்பேட்டை மற்றும் கொரட்டூர் ஆகிய இடங்களில் 45 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கூடங்கள் ; திருவான்மியூர் கலாஷேத்திரா சாலையில் 23 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை தொழிலாளர்களுக்கான இருப்பு அறை; அம்பத்தூர் -தாங்கல் ஏரியில் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இறுதி சடங்கு மண்டபம்; பாடி -செல்லியம்மன் நகரில் 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் விளையாட்டு திடல்; அசோக் நகர் மற்றும் அம்பத்தூர் -ரேடியல் ஹவுஸ் ஆகிய இடங்களில் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சத்துணவு மையக் கட்டடங்கள்; என மொத்தம் 36 கோடியே 26 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகங்கள், உயர்மட்ட பாலம், பூங்காக்கள், சமுதாயக் கூடங்கள், பேருந்து நிலையம், அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்கள்.