சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆய்வு- பொதுமக்களுக்கு ஆறுதல்!

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா  நேரில் ஆய்வு- பொதுமக்களுக்கு ஆறுதல்!

திங்கள் , நவம்பர் 16,2015

     கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னை மாநகரமே மழை வெள்ளத்தால் மூழ்கி அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை நகரில் எங்கெங்கும் வெள்ளம்… வெள்ள சாலைகளிலேயே படகுகள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

                                            இந்நிலையில் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் பார்வையிட்டார். முதலில் தமது ஆர்.கே.நகர் தொகுதியில் வெள்ள பாதிப்புகளை வேனில் அமர்ந்தபடியே அவர் பார்த்தார். பின்னர் வெள்ள நிவாரணப் பணி விவரங்களை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் ஜெயலலிதா பேசியதாவது: 3 மாதங்களாக பெய்ய வேண்டிய ஒரு சில நாட்களில் கொட்டியுள்ளது. இருப்பினும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழையால் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க இயலாதது. மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் 48 இடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 7 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. 165 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மழைநீரை வெளியேற்ற அதிநவீன வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். மழை வெள்ளத்தால் பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.