சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில்,தட்டம்மை தடுப்பூசி முகாம்கள்:ஒரே நாளில் 31,692 பேர் பயன் பெற்றனர்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில்,தட்டம்மை தடுப்பூசி முகாம்கள்:ஒரே நாளில் 31,692 பேர் பயன் பெற்றனர்

ஞாயிறு, டிசம்பர் 13,2015,

தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாமினை தொடங்க ஆணையிட்டார். இதன்படி சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தட்டம்மை தடுப்பூசி முகாம்கள் நேற்று முன்தினம் தொடங்கியது.

மழையினால், குழந்தைகளுக்கு வரும் தட்டம்மை நோயை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் 186, காஞ்சீபுரத்தில் 109, திருவள்ளூரில் 65 என மொத்தம் 360 முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் மூலம் சுமார் 5.58 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் கடந்த 11-ந்தேதி மட்டும் 31,692 நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி முகாம்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடையும் வரை தொடர்ந்து செயல்படும். அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசியை பெற்று தட்டம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது