சென்னை நகருக்கு தினசரி 3 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

சென்னை நகருக்கு தினசரி 3 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

ஜூன் 11, 2017,ஞாயிற்றுகிழமை,

கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை சுத்திகரித்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தினமும் 3 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

மாங்காடு அருகே, சிக்கராயபுரத்தில் உள்ள கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை சுத்திகரித்து சென்னையின் குடிநீர் தேவைக்காக  பயன்படுத்தும் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், “பருவமழை குறைவு, கடும் வெப்பம் போன்ற காரணங்களால் இந்த ஆண்டு சென்னை நகருக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளிலும், வீராணம் ஏரியிலும் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருக்கின்றது.  கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை குறைவாக இருந்ததால் குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு கடுமையாக குறைந்தது.  எனவே, புறநகர் பகுதிகளில் இருக்கும் மரபான நீர் ஆதாரங்களுடன் கல்குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீர்,  விவசாய கிணறுகள் போன்ற மரபு சாராதவற்றில் இருந்தும் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டது.

இதையடுத்து முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள 22-க்கும் மேற்பட்ட குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பல அடி ஆழத்தில் உள்ள குவாரியில் இருந்து தண்ணீரை எடுப்பது குறித்து பல்வேறு ஆய்வுகள், சோதனைகள் செய்யப்பட்டன. தேங்கியிருக்கும் நீரின் தரத்தை கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட், அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல்,  புவி அமைப்பியல் துறை உட்பட பல துறை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.  கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, சென்னை நகருக்கு விநியோகம் செய்ய உகந்தது என ஆய்வின் முடிவில் தெரியவந்தது.  குவாரிகளில் இருந்து தண்ணீரை பம்ப் செய்து குழாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது.

மேலும் இதிலிருந்து தினசரி 3 கோடி லிட்டர் வீதம் சுமார் 300 கோடி லிட்டர் நீர் 100 நாள்களுக்கு பெற திட்டமிடப்பட்டன. இப்பணிகள் 13.63 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.  அதன் பின்னர் இப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டது. தற்சமயம் 600 மிமீ விட்டமுள்ள DI இரும்பு குழாய்கள் 2900 மீட்டர் நீளத்துக்கும் 600 மிமீ விட்டமுள்ள HDPE பிளாஸ்டிக் குழாய்கள் 900 மீட்டர் நீளத்துக்கும் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் பம்ப்செட் மற்றும் ஜெனரேட்டர் இயந்திரங்கள் கல்குவாரியில் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.  மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரம் திருப்திகரமாகவும் உள்ளது.

இதனை தொடர்ந்து 9.06.2017 முதல் தினமும் 3 கோடி லிட்டர் குடிநீர் செம்பரம்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

ஆய்வின்போது அமைச்சர் பென்ஜமின், கே.என்.ராமச்சந்திரன் எம்.பி., கே.பழனி எம்.எல்.ஏ., வாலாஜாபாத் பா.கணேசன், கலெக்டர் பொன்னையா, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.அருண்ராய் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.