சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரம்: 3 நாட்களில், குப்பைகள் அனைத்தும் அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரம்: 3 நாட்களில், குப்பைகள் அனைத்தும் அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி தகவல்

புதன், டிசம்பர் 09,2015,

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றும் பணிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 584 வாகனங்களுடன் 22,500 பேர் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வீதிகளில் அசாதாரணமான அளவில் சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் ஒதுங்கியுள்ள நிலையில், இந்தக் குப்பைகள் அனைத்தும் 3 அல்லது 4 நாட்களில் அகற்றி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை நகரில் தேங்கிய மழைநீரை மாநகராட்சியின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு வெளியேற்றியதுடன், தேங்கிய குப்பைகளையும், கழிவுகளையும் அகற்றி, விஷக் கிருமிகள் பரவாமல் தடுக்க Bleaching Powder தெளிக்கப்பட்டு, மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும், அரை கிலோ Bleaching Powder வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியின் 584 வாகனங்களுடன், 22,500 துப்புரவு பணியாளர்கள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், 9 மாநகராட்சிகள், 23 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இருந்து துப்புரவு பணியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட 2 ஆயிரத்து 150 பேர் வரவழைக்கப்பட்டு, துப்புரவு பணியை மேற்கொண்டுள்ளனர்.

ஆறுகளின் இருபுறங்களிலும், தாழ்வான பகுதிகளில் அமைந்திருந்த வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டதில், பயன்படுத்த முடியாத வீட்டு உபயோகப் பொருட்களும் கழிக்கப்படுகின்றன. எனவே, சென்னை நகரின் வீதிகளில், சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் கழிவுகள் சேர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இவற்றை முற்றிலுமாக அகற்றி தூய்மைப்படுத்திட, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதலாக 400 டிப்பர் லாரிகளும், 6,250 துப்புரவு பணியாளர்களும் வரவழைக்கப்பட்டு, தூய்மைப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு துப்புரவுப் பணிகள், சென்னை மாநகராட்சியின் 101-வது கோட்டத்தில் உள்ள அண்ணா வளைவு அருகே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 3 அல்லது 4 நாட்களில், முழுவதுமாக 100 சதவீதம் அளவுக்கு குப்பைகள் அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.