சேலத்துக்கு பொதுக்கூட்டத்தில் பேருரையாற்ற வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு

சேலத்துக்கு பொதுக்கூட்டத்தில் பேருரையாற்ற வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு

புதன், ஏப்ரல் 20,2016,

சேலம் மகுடஞ்சாவடியை அடுத்த கூத்தாடிபாளையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சாலையின் இருமருங்கிலும் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கே தங்கள் வாக்கு என விண்ணதிர முழக்கமிட்டனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா, “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற தாரக மந்திரத்துடனும், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி என்ற முழக்கத்துடனும், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை, சென்னையில், கடந்த 9-ம் தேதி தொடங்கி, பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களில், பேருரையாற்றி, கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் ஜெயலலிதா, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே கூத்தாடிப்பாளையத்தில் இன்று நடைபெற்ற எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திரும்பிய திசையெல்லாம் அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே எழுச்சியுரையாற்றி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு பேராதரவு திரட்டினார்.

சென்னையிலிருந்து திருச்சி வழியாக சேலம் சென்றடைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, சேலம் புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான திரு. P. தங்கமணி, கழக அமைப்புச் செயலாளர்கள் திரு. செ. செம்மலை, திரு. எஸ். ராஜு, கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.K. செல்வராஜ் எம்.பி., ஆகியோர் மலர்க்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

பொதுக்கூட்ட மேடைக்குச் செல்லும் வழியில், முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக, வழிநெடுகிலும், சாலையின் இரு மருங்கிலும், கழகக் கொடித் தோரணங்கள் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. செண்டைமேளங்கள், தவில், நாதஸ்வரம், கொம்பு உள்ளிட்ட பல்வேறு இசைக் கருவிகள் முழங்க முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கழக மகளிரணி சார்பில், ஏராளமான பெண்கள் பூரணகும்ப மரியாதை வழங்கினர். திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சார்பிலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பூரண கும்பமரியாதை வழங்கப்பட்டது. அவற்றை முதலமைச்சர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். பொதுக்கூட்ட மேடைக்கு வருகைதந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அங்கு திரண்டிருந்த லட்சோபலட்சம் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் “அம்மா வாழ்க” என்று எட்டுத்திக்கும் எதிரொலிக்க, உற்சாக வாழ்த்தொலி முழக்கங்களுடன் வரவேற்பளித்தனர்.

பொதுக்கூட்டத் திடலில், லட்சக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்களையும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களையும் பார்த்து, இரட்டை இலை சின்னத்தைக் குறிக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, தமது இரு விரல்களை உயர்த்திக் காண்பித்து, அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா, எழுச்சிப் பேருரையாற்றி, சட்டமன்றத் தேர்தலில், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட 46 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கேரளா மாநிலத்திற்குட்பட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளின் கழக வேட்பாளர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பேராதரவு திரட்டினார்.

53 சட்டமன்றத் தொகுதிகளின் அ.இ.அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்துவைத்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா அன்புடன் கேட்டுக் கொண்டார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டிருந்து, முதலமைச்சருக்கு மகிழ்ச்சிபொங்க வரவேற்பு அளித்து, பேராதரவு தெரிவித்தது, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றியை மென்மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது.