சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் ; சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் ; சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2017,

புதுடெல்லி : சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது,

உச்ச நீதிமன்றம் நேற்று காலை கூடியதும், நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு 10.32  மணிக்கு தீர்ப்பை வழங்கத் தொடங்கியது. சரியாக 8 நிமிடங்களில் வழக்கின் முக்கிய தீர்ப்பை மட்டும் வாசித்து முடித்தது. இதில், பெங்களூரு விசாரணை நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தும், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் அறிவித்தனர்.

ஊழல் வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தது. விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் உடனடியாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் கடந்த 21 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த ஊழல் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சசிகலா நடராஜன் (60) நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியது இருப்பதால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது. அவர் ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்து இருப்பதால் இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்கு மேல்  சிறையில் இருக்க வேண்டியது உள்ளது.