ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக-காங்கிரஸே காரணம் ; அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக-காங்கிரஸே காரணம் ; அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

வியாழன்,ஜனவரி 5,2017,

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு திமுக-காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்றும் இந்தப் பிரச்னையில் உண்மைகளை குழிதோண்டி புதைத்து விட்டு மக்களை மு.க.ஸ்டாலின் திசை திருப்புகிறார் என்றும் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போராட்டத்தைப் பற்றிய முழு உண்மைகளையும் அவர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
2006-ஆம் ஆண்டு முதலே பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கேட்டு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மத்தியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு காட்சி விலங்குகள் பட்டியலில் காளை மாடுகளையும் சேர்த்தது. இந்த அறிவிக்கையால் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உச்ச நீதிமன்றம் முழுமையாகத் தடை செய்தது. இந்தப் பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், மத்திய அரசு காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகள் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு காப்புரையை மட்டும் வெளியிட்டதே தவிர ஜல்லிக்கட்டுக்குத் தடை வரக் காரணமாக இருந்த அம்சத்தைத் தொடவே இல்லை.
இந்தக் காப்புரையை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. காட்சி விலங்குகள் பட்டியலில் காளை மாடுகள் நீடிக்கும் வரை தடையை நீக்க முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடாக இருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து விட்டது.
ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் வேண்டாம்: ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு ஜெயலலிதா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் மூடி மறைத்து விட்டு, திமுக மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த போது மேற்கொண்ட ஒரு நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும் நிலை வந்தது. இந்த உண்மையை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் ஈடுபடுவது பொறுப்பான செயல் அல்ல. தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியிலும், உண்மைகளை மூடி மறைக்கும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று அந்த அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.