ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வியாழக்கிழமை, டிசம்பர் 24,

வரும் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:
பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பல நூற்றாண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இது கிராமப்புற, விவசாய மரபுகளின் ஒரு பகுதியாகவே உள்ளது.
பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் 22-ஆவது பிரிவின்படி (உட்பிரிவு 2), விலங்குகள் காட்சிப்படுத்துவதைத் தடுக்கவும், அவற்றுக்குப் பயிற்சி அளிப்பதைத் தடை செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 11.07.2011-ஆம் தேதியிட்ட அறிவிப்பாணையின்படி, கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம் ஆகிய காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் எருதுகளும் சேர்க்கப்பட்டன.
இந்த அறிவிப்பாணை சரியானதே என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் எருதுகளைக் காட்சிப் பொருளாக பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்துள்ள மறுசீராய்வு மனுவும் இப்போது நிலுவையில் உள்ளது.
மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தல்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தும் வகையில் இதுதொடர்பாக உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து பல்வேறு கட்டங்களாகப் பேச்சுகளும் நடைபெற்றுள்ளன.
ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என நம்புகிறோம். இந்த விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான சட்ட ரீதியிலான தடையை நீக்க வேண்டும் என ஆகஸ்ட் 7-ஆம் தேதி உங்களிடம் அளித்த மனுவிலும் வலியுறுத்தினேன். தமிழக மக்களின் பாரம்பரியத்தில் ஒரு பகுதியாக உள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்த முடியாமல் இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக கிராமப்புற மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்படும் என ஆவலோடு எதிர்பார்த்தோம்.
இந்த நிலையில், மாநிலங்களவையில் நிலவிய அமளி காரணமாக ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாகச் செய்திகள் வந்துள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு விளையாட்டுடன் இணைந்துள்ள தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக அறிமுகம் செய்ய வேண்டும் என மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். வரும் 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும்.
இதற்காக நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நீட்டிக்கப்பட வேண்டும் அல்லது இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். இந்த அவசரச் சட்டம் உடனடியாகப் பிறப்பிக்கப்பட வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் உங்களை வலியுறுத்துகிறேன் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.