ஜல்லிக்கட்டு நடத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நன்றி

ஜல்லிக்கட்டு  நடத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நன்றி

சனி, ஜனவரி 02,2016,

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். பாரம்பரிய விளையாட்டுக்கு எதிரான சட்ட சிக்கல்களை நீக்கி உறுதியான உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுவரவதாகவும் அவர் கூறினார்.

2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதியன்று, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப் பொருளாக பயன்படுத்தக்கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளை சேர்த்து, ஓர் அறிவிக்கை வெளியிட்டது – இந்த அறிவிக்கை சரியானது என கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதியன்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளை மாடுகளை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது – இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ்க அரசு உடனடியாக, மறுஆய்வு மனு ஒன்றை கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது – இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியைப் பெற, தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருவதுடன், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக, உரிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது – இதுதொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் தொடர்ந்து பல சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்தொடர்ச்சியாக கடந்த 22ம் தேதி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கேட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதியன்று, பிரதமரிடம் தாம் மனு அளித்தது குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தார்.

பிரச்னையின் முக்கியத்துவம் கருதி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாக கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியிருந்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வேண்டுகோளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டை இந்த ஆண்டே நடத்த, உரிய உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக மத்திய அரசு தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்த மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு எதிரான சட்ட சிக்கல்களை முழுமையாக களைந்து, உறுதியான உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.