ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து வகையிலும் உதவிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நன்றி

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து வகையிலும் உதவிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  நன்றி

புதன்கிழமை, பிப்ரவரி 01, 2017,

சென்னை ; ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் 213-வது பிரிவின்படி குடியரசுத் தலைவரின் வழிகாட்டுதல்கள் பெறப்பட்ட பின்னர் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.இந்த அவசரச் சட்டத்துக்குப் பதிலாக, சட்டப் பேரவையில் கடந்த 23-இல் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து, ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்த தங்களுக்கு தமிழக அரசின் சார்பிலும், மக்களின் சார்பிலும் நன்றி. இதனால், தமிழர்களின் கலாசாரம்-பாரம்பரியம் ஆகியன காக்கப்பட்டுள்ளது. என முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.