ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : பாராளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வற்புறுத்தல்

ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் :  பாராளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வற்புறுத்தல்

சனிக்கிழமை, மார்ச் 11, 2017,

புதுடெல்லி : ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பாராளு மன்றத்தில் வற்புறுத்தினார்கள்.

மாநிலங்களவை நேற்று காலையில் தொடங்கியதும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி அளித்துள்ள ஒத்திவைப்பு நோட்டீûஸ ஏற்க வேண்டும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் டாக்டர் வா. மைத்ரேயன், ஆர்.லட்சுமணன் ஆகியோர் அவையின் மையப் பகுதிக்குச் சென்று குரல் கொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பனர் சசிகலா புஷ்பாவும் மையப் பகுதிக்குச் சென்று குரல் கொடுத்தார்.

இதற்கு சசிகலா ஆதரவு அதிமுக உறுப்பினர்கள் விஜிலா சத்யானந்த், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்டோர் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதனால், அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.இதற்கு மத்தியில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அனுமதியுடன் மைத்ரேயன் பேசுகையில், “ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை, அவரது உடல்நிலை குறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, லண்டன் மருத்துவர் வெளியிட்ட அறிக்கைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளது. மரணத்தில் சந்தேகம் இருப்பதற்கான முகாந்திரத்தை இதுவே உணர்த்துகிறது. இது குறித்து சிபிஐ அல்லது நீதி விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்’ என்றார்.

மைத்ரேயன் பேச முற்பட்டபோது விஜிலா சத்யானந்த் குறுக்கிட்டு, “நாடாளுமன்ற மரபுகளுக்கு புறம்பாக மைத்ரேயன் பேசுகிறார். அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். மிகப் பெரிய தலைவருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் மைத்ரேயன் பேசுகிறார்’ என்று குரல் எழுப்பியபடி இருந்தார்.இதனால், அதிருப்தி அடைந்த பி.ஜே. குரியன், “நீங்கள் பெண் எம்.பி. ஆக இருப்பதால் அமைதியாக இருக்கிறேன். வேறு யாரேனும் இவ்வாறு ஒழுங்கீனமாகச் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன்’ என்று எச்சரித்தார்.