ஜெயா தொலைக்காட்சியின் 18-ம் ஆண்டு தொடக்க விழா ; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வாழ்த்து

ஜெயா தொலைக்காட்சியின் 18-ம் ஆண்டு தொடக்க விழா ; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வாழ்த்து

திங்கள் , ஆகஸ்ட் 22,2016,

ஜெயா தொலைக்காட்சி 17 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 18-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. மகிழ்ச்சிகரமான இத்தருணத்தில், ஜெயா தொலைக்காட்சி மேன்மேலும் சிறப்புற பிரதமர் திரு. நரேந்திரமோடி, மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர்.

ஜெயா தொலைக்காட்சி, இன்று தனது 18-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி, பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஜெயா தொலைக்காட்சி இன்று தனது 18-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அதன் வளம் மிக்க பன்முகத்தன்மை வாய்ந்த கலை, கலாச்சாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் மூலம் நமது துடிப்பு மிகுந்த நாட்டிற்கு எப்போதுமே பெருமை சேர்த்து வந்துள்ளது – தமிழகம் பெரும் ஞானிகளின் ஞானத்தையும், விஞ்ஞானிகளின் அறிவாற்றலையும், இசை ராகங்களையும், பரத நாட்டியக் கலையையும், இயற்கை அழகின் ஆறுதலையும் நாட்டிற்கு தந்து மேன்மைப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு. நரேந்திரமோடி, சமூகத்தின் நலனுக்காக, ஜெயா தொலைக்காட்சி தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பணியாற்றுகிறது என பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜெயா தொலைக்காட்சி, இன்று 18-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கும் முக்கிய பிராந்திய செய்தி சேனல்களில் ஜெயா தொலைக்காட்சியும் ஒன்றாகும் – பிராந்திய செய்தி சேனல்கள், சமூகத்தினரின் அறிவு வளர்ச்சிக்கும், ஆர்வத்திற்கும் முக்கிய பங்காற்றுகின்றன – அந்த வகையில் ஜெயா தொலைக்காட்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே இப்பணியை வெற்றிகரமாக செய்து வருகிறது – ஜெயா தொலைக்காட்சிக்கு தனது நல்வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாகவும், சமுதாயத்தினருக்கு இத்தொலைக்காட்சி மேலும் உத்வேகத்துடன் தொடர்ந்து சேவையாற்றும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ள திரு. அருண்ஜேட்லி, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான, கட்டுக்கோப்பான பங்கினை இத்தொலைக்காட்சி செலுத்தி வருவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.