ஜெருசலேம் புனிதபயணம் செல்ல தமிழக அரசு நிதியுதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜெருசலேம் புனிதபயணம் செல்ல தமிழக அரசு நிதியுதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு

சனி, ஜனவரி 16,2016,

தமிழக அரசின் நிதியுதவியுடன் ஜெருசலேம் புனிதபயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் புனிதப் பயணம், பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது. இந்தப் புனிதப் பயணம், வரும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.

தமிழக அரசின் நிதியுதவியுடன் ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பத்தாரர், தமிழ்நாட்டில் வசிக்கும் கிறிஸ்தவ மதத்தவராக இருக்கவேண்டும். இம்மாதம் ஒன்றாம் தேதியில் குறைந்தப்பட்சம் ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் உடையவராக இருக்கவேண்டும். விண்ணப்பிக்கும்போது வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு எந்தவிதமான வில்லங்கமும் இருக்கக்கூடாது. வெளிநாடுகளில் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு மருத்துவம் மற்றும் உடல் தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும். இப்பயணம் மேற்கொள்வதற்காக ஏற்படும் செலவினத்தில் அரசு வழங்கும் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாய் நீங்கலாக, மீதமுள்ள தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்கவேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

விண்ணப்பப் படிவங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் படியிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான அனைத்து இணைப்புகளுடன், வரும் 25-ம் தேதிக்குள், சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.