டாக்டர் அப்துல்கலாமின் நினைவிடம் கட்டுவதற்காக ராமேஸ்வரத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் நன்றி

டாக்டர் அப்துல்கலாமின் நினைவிடம் கட்டுவதற்காக ராமேஸ்வரத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் நன்றி

செவ்வாய்கிழமை, டிசம்பர் 29, 2015,

சென்னை, ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமுக்கு மத்திய அரசு நினைவகம் அமைக்க தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

‘‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் கடின உழைப்பாலும், ஒருமுக சிந்தனையாலும், விடாமுயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் அன்பு பாராட்டப்பட்ட இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராகவும், இந்தியாவின் மிக உயர் விருதான பாரத ரத்னா விருதை பெற்றவராகவும், அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படும் ஒரு புகழ்ப் பெற்ற திருமகனாகவும் விளங்கியவர் ஆவார்.அவரது திடீர் மறைவினை அறிந்த முதலமைச்சர்ஜெயலலிதா மிகுந்த வேதனையுற்றது மட்டுமின்றி, அப்துல் கலாம் நல்லடக்கம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற வேண்டும் என அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, உடனடியாக அரசு இடத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி அன்னாராது நல்லடக்கம் ராமேஸ்வரத்தில் 30.7.2015 அன்று நன்முறையில் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும் எனக் கனவுக் கண்டார். மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரால் தான் அந்த கனவை நனவாக்க முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும் அவர் மாணவர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால், மாணாக்கர்களை கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக்கூடாது உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்கவேண்டும் என தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக எடுத்துரைத்தார். இளையத் தலைமுறையினர் மற்றும் மாணாக்கர்கள் உயர்நிலை அடைவதற்கு உந்து சக்தியாக விளங்கிய அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15-ம் நாள் ‘இளைஞர் எழுச்சி நாள்’ என தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் கடைப்பிடிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவ்வாறே 15.10.2015 தமிழக அரசின் சார்பில் இளைஞர் எழுச்சி நாளாக கடைபிடிக்கப்பட்டது.

மேலும் அன்னாரது புகழுக்கு மகுடம் சேர்க்கும் விதமாக, அன்னாரது நினைவைப் போற்றும் விதமாக ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது’ என்ற ஒரு விருதினை உருவாக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்த ஆண்டு இந்த விருது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட அலுவலராக பணியாற்றும் என்.வளர்மதி என்பவருக்கு வழங்கப்பட்டது.

கடந்த 7.8.2015 அன்று பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த போது மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை நல்லடக்கம் செய்த இடத்தில் மத்திய அரசின் சார்பில் தேசிய நினைவகம் அமைக்க உள்ளதாகவும், அதற்காக தமிழ்நாடு அரசு தேவையான நிலத்தினை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று முதலமைச்சர் ஜெயலலிதா தேவையான நிலத்தினை வழங்க ஆணை பிறப்பித்தார். 13.8.2015 நாளிட்ட கடிதத்தில் மைய அரசின் நகர்புற வளர்ச்சித் துறை செயலர் நினைவகம் அமைக்கத் தேவையான நிலத்தினை ஒதுக்கீடு செய்ய கடிதம் எழுதினார். ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், பாம்பன் குரூப் கிராமம், புல எண்149/1ல் 0.55.0 ஹெக்டேர் (1.36 ஏக்கர்) நிலம் அரசாணை (நிலை) எண் 324, வருவாய்த்துறை, நாள் 2.9.2015ன்படி நிலக்கிரயமின்றி மத்திய அரசுக்கு நிலமாற்றம் செய்து உத்தரவு வழங்கப்பட்டது. 15.10.2015 அன்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு மத்திய அரசு ராமேஸ்வரத்தில் நினைவகம் அமைக்கும் என்று அறிவித்தார். மைய அரசு நினைவகம் அமைப்பது குறித்து ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் 6.11.2015 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவகம் அமைப்பதற்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்ததற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தார். தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தில் வேலி அமைக்க மத்திய பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.