டிடிவி தினகரன் அதிமுகவின் எந்த வித பதவியையும் வகிக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

டிடிவி தினகரன் அதிமுகவின் எந்த வித பதவியையும் வகிக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

ஆகஸ்ட் 11 , 2017 ,வெள்ளிக்கிழமை,

சென்னை : டிடிவி தினகரன் அதிமுகவின் எந்த வித பதவியையும் சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் அவரது வாழ்க்கையே அர்ப்பணித்து, வளர்க்கப்பட்டு இன்று இந்திய நாட்டின் 3-வது பேரியக்கமாக உருவெடுத்துள்ள அ. தி.மு.க.வின் 1.50 கோடி தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள். நாம் வணங்கும் ஜெயலலிதா நம்மை அனைவரையும் மீளாத் துயரில் விட்டுவிட்டு 5.12.2016 தேதியில் மண்ணுலகை விட்டு மறைந்ததை இன்றும் ஏற்க இயலாத மன நிலையில் நாம் அனைவரும் உள்ளோம். நாம் ஒவ்வொருவரும் அவரது ஆன்மா சாந்தி அடைய அவரது நோக்கங்களை, லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்ற ஒன்றுகூடி உறுதிமொழி எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற பொன்மொழிக்கேற்ப நாம் ஒன்றுகூடி ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். நமது கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக கழக பணியாற்றிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா இடத்தில் வேறு எவரையும் நமது கழகத் தொண்டர்கள் அமர்த்தி அழகு பார்க்க விரும்ப மாட்டார்கள்.
வழிநடத்தி வருகிறோம்

அவரது மறைவிற்குப் பின்னர் சசிகலாவை பொதுச் செயலாளராக கழக சட்டத்திட்டங்கள்படி புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் வரை நியமிக்கப்பட்டாலும், அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அவரால் செயல்படா நிலை ஏற்பட்டுள்ளதாலும் மற்றும் பல்வேறு நபர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாலும் நமது அ.தி.மு.க சட்டத்திட்ட விதி 20 (V) படி நமது அ.தி.மு.க நிரந்தரப் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி அம்மாவின் வழிகாட்டுதலின்படி கழகத்தையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறோம்.

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 19.12.2011 தேதியில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், 14.2.2017 தேதியில் கழகத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு அவரை 15.2.2017 தேதியில் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. நமது கழகத்தின் சட்டத்திட்ட விதி 30(V)ற்கு விரோதமானது. அவர் தொடர்ந்து 5 ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவரால் கழகத்தின் எப்பொறுப்பையும் கழக சட்டதிட்ட விதியின்படி வகிக்க இயலாது. தினகரன் துணைப் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தை, 3.3.2017 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் பதில் கடிதத்தில், அ.தி.மு.க பொதுச் செயலாளர், ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் பெயர் இடம்பெறவில்லை என்று கூறி அவர் கடிதத்தை ஏற்க மறுத்து நிராகரித்து விட்டது. மேலும் அவரை துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்த பொதுச் செயலாளரின் நியமனமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.

இவைகளுக்கு மாறாக தினகரன் தன்னிச்சையாக கடந்த 4.8.2017 தேதியில் நமது கழகத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நமது கழகத்தை அதன் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அம்மாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி வழி நடத்தி வரும் நிலையில் நமது கழகத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படுத்த அவரால் வழங்கப்படும் அறிவிப்புகள் அ.தி.மு.க. தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத்தாது. அவரது அறிவிப்புகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள், கழக சட்டத்திட்ட விதிகள்படி செல்லக்கூடியவை அல்ல. கழக தொண்டர்கள் அதனை நிராகரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவின் உயரிய லட்சியமான ‘‘ஒவ்வொரு கழக தொண்டனுக்கும் வாய்ப்பு’’ ‘‘உழைப்பால் ஒவ்வொருவரும் எல்லா நிலையையும் அடைய வேண்டும்’’ என்பதை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்று கூடி கழகத்தையும் அதன் ஆட்சியையும் வழிநடத்துவோம் என்று உறுதி ஏற்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.