டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் : ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் : ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

ஆகஸ்ட் 25 , 2017 ,வெள்ளிக்கிழமை, 

சென்னை : டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் 19 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இந்த நோட்டீசுக்கு ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில், அ.தி. மு.க. இரு அணிகள் இணைந்தன. முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளனர். இந்நிலையில், கட்சியை வழி நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்று கூறி வந்த டி.டி.வி.தினகரன் தற்போது இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எம். எல்.ஏ.க்களுடன் தனியாக செயல்பட்டு வருகிறார். 19 எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் வித்யாசாகராவை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடிதம் கொடுத்தனர்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்பின்னர். சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோரிடம் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில்  தமிழக அரசின் கொறாடா ராஜேந்திரன் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

அ.தி.மு.க உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி, ஜக்கையன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட 19 பேர், கடந்த 16-ம்தேதி கவர்னருக்கு கடிதம் அளித்துள்ளனர். அதில் அ.தி.மு.க உறுப்பினர்கள் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து ஒருமித்த கருத்துடன் மேற்கொண்ட முடிவுக்கு எதிராக, அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக கடிதம் அளித்துள்ளனர். இது ஊடகங்கள் வாயிலாகவும் செய்திகள் வாயிலாகவும் தெரிய வந்துள்ளது. இது கட்சிக்கு விரோதமானது. தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது.

எந்த வித தீர்மானமும் முடிவும் எடுக்காமல் இப்படியொரு கடிதத்தை வழங்கியிருப்பதன் மூலம் கட்சியிலிருந்து தானாகவே விலக்கி கொள்ளும் முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். கட்சி கொறடாவான எனக்கு தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவை ஆதாரத்துடன் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளேன். முதலமைச்சருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடிதம் அளித்த 19 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளேன். கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி அவர்களை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கட்சி முடிவுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதற்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அரசுக்கு எதிராக வாக்களித்தபோதும் இதேபோன்ற மனுவை சபாநாயகரிடம் மனு வழங்கியுள்ளேன். அப்போது பரீசிலனை செய்வதாக சபாநாயகர் தெரிவித்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இது குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு தான் அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சபாநாயகர் மேற்கண்ட கடிதத்தின் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் இந்நிலையில் தலைமை கொறடாவின் புகாருக்கு பதில் அளிக்க கோரி அந்த 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 19 எம்.எல்.ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கேட்டுள்ள சபாநாயகர், ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.