தக்காளி, வெங்காயம் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

தக்காளி, வெங்காயம் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

ஜூலை ,14 ,2017 ,வெள்ளிக்கிழமை,

சென்னை : தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, வறட்சி மற்றும் பல்வேறு சூழ்நிலை காரணமாக தக்காளி, சிறிய வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டது. இதுபோன்ற காலங்களில் குறைந்த விலையில் காய்கறிகளை விற்பதற்காக மறைந்த முதலமைச்சர் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார். அதை கொண்டு கூட்டுறவு மற்றும் பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் காய்கறிகள் விற்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் நலன் கருதி கடந்த 31-5-17 வரை விவசாயிகளுக்கு ரூ.56.49 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறினார்.