தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்திற்கு நவ.19ல் தேர்தல் ; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்திற்கு நவ.19ல் தேர்தல் ; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செவ்வாய்கிழமை, அக்டோபர் 18, 2016,

சென்னை : தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அடுத்த மாதம் (நவம்பர்)  19-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலின்போது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.  மேலும், திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர் சீனிவேல் மரணமடைந்ததையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிட வசதியாக, நெல்லித்தோப்பு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான்குமார் பதவியை ராஜினாமா செய்தார். அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது.

இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், நிறுத்தி வைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதேபோல, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நவம்பர் 19-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில், தேர்தல் அறிவிக்கை இம்மாதம் 26-ம் தேதி வெளியிடப்படும். அன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நவம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும். நவம்பர் 3-ம் தேதி அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 5-ம் தேதியாகும். தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 19-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.