தஞ்சை கூலித் தொழிலாளியின் மகள் K.சாந்தினியின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்றார் முதலமைச்சர் ஜெயலலிதா

தஞ்சை கூலித் தொழிலாளியின் மகள் K.சாந்தினியின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்றார் முதலமைச்சர் ஜெயலலிதா

சனி, ஜூலை 23,2016,

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியின் வறுமை நிலையை அறிந்து,மாணவியின் மருத்துவ படிப்புக் கான முழு செலவையும் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ஏற்கனவே 3 ஏழை மாணவிகளின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரியதர்ஷினி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் மேகலா, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிருந்தாதேவி ஆகியோரின் மருத்துவ படிப்புக்கான செலவு முழுவதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.தற்போது, மேலும் ஒரு மாணவியின் மருத்துவ படிப்புக்கான செலவை முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்றுள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மருத்துவக் கல்லூரி சாலை, செங்கொல்லை பகுதியில் வசித்து வரும் சி.குமரேசன்-கே.வெள்ளையம்மாள் ஆகியோரது மகள் கே.சாந்தினி, தனது தாயும், தந்தையும் கூலி வேலை செய்து குடும்பத்தை வழிநடத்தி வருவதாகத் தெரிவித்து, மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
ஏழ்மை காரணமாக, உயர் கல்வி பெறுகின்ற நல்வாய்ப்பை யாரும் இழந்து விடக்கூடாது என்ற உயரிய சிந்தனை கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, மாணவி சாந்தினியின் கோரிக்கையை தாயுள்ளத்தோடு பரிசீலித்து, அம்மாணவியின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உள்பட மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் “புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்”-ல் இருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.