தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர் தேங்காமல், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், துரித நடவடிக்கை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஆணைப்படி உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர் தேங்காமல், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், துரித நடவடிக்கை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஆணைப்படி உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதுடன், நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கொல்லை பகுதியில் சேதமடைந்த தரைப்பாலத்தை, அமைச்சர் திரு. எம்.சி. சம்பத் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, 107 பேருக்கு நிவாரணத் தொகையாக தலா 4,100 ரூபாயும், ஆலடி பகுதியில், 47 பேருக்கு தலா 4,100 ரூபாயும் வழங்கப்பட்டது. இதனையடுத்து, ராசாபாளையம் பகுதியில், மழையினால் சேதமடைந்த வாழை மரங்களைக் கணக்கெடுக்கும் பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனிடையே, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் திரு. ஓ. பன்னீர்செல்வம், நத்தம் திரு. ஆர். விஸ்வநாதன், திரு. வைத்திலிங்கம், அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், திரு. R.B. உதயகுமார், அரசு செயலர் திரு. ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் திரு. சுரேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, 6 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தலா 4 ஆயிரம் ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரம், புத்தகரம், கதிர்வேடு உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் திரு.B.V. ரமணா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். வேணுகோபால், மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். புங்கத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி என்பவர், கடந்த 9-ம் தேதி தொடர்மழையின் காரணமாக உயிரிழந்தார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின்படி, அவரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக 4 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் நன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் பேருக்கு உணவுகளை, கழக நிர்வாகிகள் வழங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் மாஞ்சாலுமூடு பகுதியில், மழையினால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த ராமசந்திரன் குடும்பத்திற்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி 4 லட்சம் ரூபாய் நிதியுதவியை, மாவட்ட ஆட்சியர் திரு. சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.

இதனிடையே, வேலூர் மாவட்டம் வசந்தபுரம், சேனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி, மிக வேகமாக நடைபெற்று வருவதுடன், கால்வாய்கள் தூர்வாரும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் மலைச்சாலையில், சவரிக்காடு அருகே, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.