தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுகவுடன் இணைந்து பணியாற்ற தயார் : முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுகவுடன் இணைந்து பணியாற்ற தயார் : முதலமைச்சர் ஜெயலலிதா

செவ்வாய், மே 24,2016,

தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். விழாவில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக திரு. ஸ்டாலினையோ, தி.மு.க.வையோ அவமரியாதை செய்யும் எண்ணம் ஏதும் இல்லை என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டதை அறிந்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்விழாவில் கலந்துகொண்டமைக்காக திரு. மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் திரு.மு.க.ஸ்டாலின் அமர வைத்தது தமக்கு தெரியவந்தது – இவ்விழாவுக்கு வருகை தருபவர்களுக்கு அரசு நெறிமுறைகளின்படி, பொதுத்துறை சார்பில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டதாக தமக்கு தெரிவிக்கப்பட்டது என்று முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இருக்கை ஒதுக்கப்பட்டது திரு.மு.க. ஸ்டாலினுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்குமானால், திரு. மு.க. ஸ்டாலினையோ, அவரது கட்சியையோ அவமரியாதை செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திரு. மு.க. ஸ்டாலின், விழாவில் பங்கேற்பது தமது கவனத்திற்கு வந்திருக்குமேயானால், அரசு நெறிமுறைகளை தளர்த்தி, அவருக்கு முன் வரிசையில் இருக்கை வழங்குமாறு, அதிகாரிகளை தாம் அறிவுறுத்தியிருப்பேன் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலினுக்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.