தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீண்டும் இடைக்கால மனு

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீண்டும் இடைக்கால மனு

செவ்வாய், செப்டம்பர் 27,2016,

புதுடெல்லி  ;  காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீண்டும் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மேலும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசின் எந்த மனுவையும் விசாரிக்கக் கூடாது எனவும் அந்த மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

காவிரிப் பிரச்னை தொடர்பாக, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த இடைக்கால மனுவில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகம் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாதவரை, அம்மாநில அரசு தாக்கல் செய்யும் எந்த மனுவையும் விசாரிக்கக்கூடாது என்றும் தமிழக அரசின் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சுப்ரீம் கோர்ட் கடந்த 20-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், இம்மாதம் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை காவிரியில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை மதிக்காமல், கர்நாடக அரசு கடந்த 23-ம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். கர்நாடக அரசு இதேபோன்று நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது, சட்டத்திற்கு புறம்பானதாகும். எனவே, இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளை குவிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மத்திய நீர்வள ஆணையத்தின் உதவியோடு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என்றும், மனுவில் கோரப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றாதவரை, அம்மாநிலம் தாக்கல் செய்யும் எந்த மனுவையும் விசாரிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவை, தாக்கல் செய்ய நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று தமிழக அரசின் இடைக்கால மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.