தமிழகத்தில் இன்று 232 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை : முடிவு இன்று மதியம் தெரியும்

தமிழகத்தில் இன்று  232 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை : முடிவு  இன்று மதியம் தெரியும்

வியாழன் , மே 19,2016,

தமிழகம் முழுவதும் 232 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று 68 மையங்களில் நடைபெறுகிறது. இந்த பணியில் 13 ஆயிரத்து 592 மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

6 முனை போட்டி:- கடந்த 16-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் நீங்கலாக, 232 தொகுதிகளில் நடைப்பெற்றது. முன்னதாக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்யும் பணி ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி முடிந்தது. வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து அன்றைய தினம் பல மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் களம் சூடுபிடித்தது.  இத்தேர்தலில் அதிமுக 227 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 இடங்களிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர். தி.மு.க – காங்கிரஸ் ஒரு அணியாகவும், தே.மு.தி.க – மக்கள் நல கூட்டணி ஒரு அணியாகவும், பா.ஜ.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிட்டனர். ஆக இத்தேர்தலில் 6 முனை போட்டி ஏற்பட்டது.

ஒரு கோடி இளம் வாக்காளர்கள்:-
இந்த தேர்தலில் முதன்முறையாக, இளம்வாக்காளர்கள் ஒரு கோடி பேர் வாக்களித்தனர். மிகுந்த ஆர்வத்துடன் வந்து இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் வாக்களித்ததை காணமுடிந்தது. அதேபோல, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பெண்களும் திரண்டு வந்து நீண்ட வரிசையில் பொறுமையாக காத்திருந்து வாக்களித்தனர். மழையின் காரணமாக பல மாவட்டங்களில் துவக்கத்தில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தாலும், போகப்போக சூடுபிடித்தது. இத்தேர்தலில் மொத்தம் 74 சதவீத வாக்குகள் தமிழகம் முழுவதும் பதிவாகின. பதிவான வாக்குகள் அடங்கிய ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஓட்டுப்பெட்டிகள் உள்ள இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்:- தமிழகத்தில்  65 ஆயிரத்து 762  மையங்களில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 1 லட்சத்து 4 ஆயிரம் மின்னணு இயந்திரங்களும், 75 ஆயிரம் கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த தேர்தலில் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் நீங்கலாக மீதியுள்ள 232 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் 68 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இதற்காக 3 ஆயிரத்து 236 மேஜைகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்படும். சோழிங்கநல்லூர் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக 10 மேஜைகள் அமைக்கப்படும். முதலில் தபால் ஒட்டுக்கள் எண்ணப்படும். அதைத்தொடர்ந்து மற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும். 9621 பேர் மின்னனு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவார்கள். 3971 பேர் ஓட்டு எண்ணிக்கையை கண்காணிப்பார்கள். மொத்தம் 13 ஆயிரத்து 592 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதன் காரணமாக 9 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை நிலவரம் தெரிந்துவிடும்.

3 அடுக்கு பாதுகாப்பு:-
ஓட்டு எண்ணப்படும் இடங்களில் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 3 அடுக்குகள் கொண்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இருப்பார்கள். இரண்டாம் அடுக்கில் துணை நிலை ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். மூன்றாம் அடுக்கில் தமிழக உள்ளூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் வாகனங்களை நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
செல்போன் பயன்படுத்த தடை:-

ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு ஏஜெண்ட் அனுமதிக்கப்படுவார். அவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது. ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணைய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டைகள் இல்லாமல் வந்தால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒவ்வாரு மேஜைக்கும் ஒரு பார்வையாளர் அமர்த்தப்படுவார். ஒவ்வொரு மேஜையின் வாக்கு எண்ணிக்கையும் சி.சி.டி.வி காமிரா மூலம் பதிவு  செய்யப்படும். பார்வையாளர் அனுமதித்த பின்னரே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படும். 5 நிமிடத்திற்கு ஒரு முறை வாக்கு எண்ணிக்கை விபரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும். மாலை 3 மணிக்குள் 232 தொகுதிகளின் முழுமையான முடிவுகள் வெளியாகும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடையாள அட்டை வைத்திருப்பவர் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை மையங்களின் 100 மீட்டர் தூரம் வரை எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது.   சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மையங்களில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடையாள அட்டை வைத்திருப்பவர் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை மையங்களின் 100 மீட்டர் தூரம் வரை எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது.

பகல் 12 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்பது அப்போதே தெளிவாகி விடும். அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. தமிழக சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ஆகும். மெஜாரிட்டிக்கு தேவையான 118 உறுப்பினர்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.