தமிழகத்தில் பிரசாரம் ஓய்ந்தது, நாளை வாக்குப்பதிவு : ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பிரசாரம் ஓய்ந்தது, நாளை வாக்குப்பதிவு : ஏற்பாடுகள் தீவிரம்

ஞாயிறு, மே 15,2016,

தமிழகம் முழுவதும் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு  நாளை  (மே 16) நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
 தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் தயாராக உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
 இதனிடையே, கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் மும்முரமாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை (மே 14) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. சட்டப் பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,776 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். அதில், 3,454 வேட்பாளர்கள் ஆண்கள். 320 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் இரண்டு பேரும் போட்டியில் உள்ளனர்.
 ஜனநாயகத் திருவிழா: சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. 5.79 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, 5.82 கோடியாக உயர்ந்துள்ளது.
 66 ஆயிரம் வாக்குச்சாவடிகள், 4.3 லட்சம் ஊழியர்கள்: வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 66,001 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்து 4 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தொடர்புடைய வாக்குச்சாவடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 15) மாலைக்குள் அனுப்பி வைக்கப்படும். அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவை நடத்துவதற்காக, 4.3 லட்சம் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தேர்தல் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 அவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள் வழங்கப்படும் எனவும், தொலை தூரத்தில் வாக்குச் சாவடிகள் இருந்தால் அன்றைய தினமே அவர்கள் பணியிடங்களுக்குச் செல்ல வேண்டுமெனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் பணிகளும் ஞாயிற்றுக்கிழமை (மே 15) இரவுக்குள் நிறைவடையும். தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.32 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
 68 வாக்கு எண்ணும் மையங்கள்: வாக்குப் பதிவு திங்கள்கிழமை (மே 16) நிறைவடைந்ததும் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. இதற்காக தமிழகத்தில் 68 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர்.
 பிரசாரம் ஓய்ந்தது: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற தீவிர பிரசாரம், சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. இந்த பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் உள்பட பலரும் வாக்காளர்களிடையே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 ரொக்கப் பணம்: சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதி கடந்த மார்ச் 4 ஆம் தேதி வெளியானவுடனேயே நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன.
 அப்போது முதல் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. இதன்மூலம், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சுமார் ரூ.38 கோடி திருப்பி அளிக்கப்பட்டது. மீதமுள்ள பணம் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 தேர்தலின் போது, மிகப்பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தமிழகத்தில் இதுவே முதல் முறை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 வாக்காளர்கள் உறுதிமொழி: பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதிமொழியை 1.64 கோடி பேர் தமிழகம் முழுவதும் ஏற்றுக்கொண்டனர். வாக்குக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து, தேர்தல் ஆணையம் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வை கடந்த 10 ஆம் தேதி நடத்தியது குறிப்பிடத்தக்கது.