தமிழகத்தில் ரூ.2,560 கோடி மதிப்பில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்கள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் ரூ.2,560 கோடி மதிப்பில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்கள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

திங்கள் , ஜனவரி 04,2016,

சென்னை : 2559 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டு குடிநீர் திட்டங்கள், குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டம், மழைநீர்சேகரிப்பு கட்டமைப்பு, எல்.இ.டி. தெருவிளக்குகள், அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு

முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வேலூர் மாவட்டம் – வேலூர் மாநகராட்சி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், மேல்விஷாரம், ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, அரக்கோணம் ஆகிய 11 நகராட்சிகள், நாட்ராம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம், ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் 944 வழியோர ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் 1295 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை காணொலிக்காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்கள். மேலும்,1264 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டங்கள், குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், எல்.இ.டி. தெருவிளக்குகள், அலுவலகக் கட்டடங்கள், உயிரி எரிவாயுகூடங்கள், துப்புரவு பணியாளர்களுக்கான குடியிருப்புகள், மேம்படுத்தப்பட்ட பேருந்துநிலையங்கள், சுகாதார வளாகங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, சென்னை மாநகராட்சியின் சார்பில் 643 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள சாலை மேம்பாட்டுப் பணிகளை துவக்கி வைத்து, 1141 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும்பேருந்து பயணிகள் நிழற்குடைகள் அமைப்பதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதிகளை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமையாகும். இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், கழிவு நீரை அகற்றிடவும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யவும், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை சீரியமுறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு வேலூர் மாவட்டம்- வேலூர் மாநகராட்சி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர்,பேர்ணாம்பட்டு, குடியாத்தம், மேல்விஷாரம், ஆற்காடு, இராணிப்பேட்டை,வாலாஜாபேட்டை மற்றும் அரக்கோணம் ஆகிய 11 நகராட்சிகள், நாட்ராம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம், ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் 944 வழியோர ஊரக குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 1295 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்..

மேலும், மதுரை மாவட்டம் – மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் ஆகிய நகராட்சிகள், திருநகர், விளாங்குடி, பரவை, வெள்ளாளப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1430 ஊரக குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டம் – சிங்கம்புணரி பேரூராட்சி ஆகியவைபயன்பெறும் வகையில் 784 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; சேலம் மாவட்டம் – எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் மகுடஞ்சாவடி ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 327 ஊரக குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 46 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; ஈரோடு மாவட்டம் – ஈரோடு ஒன்றியம், மேட்டு நாசுவம்பாளையம்மற்றும் 5 ஊராட்சிகளில் உள்ள 93 ஊரக குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 11 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 841 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 3 கூட்டுக் குடிநீர்த்திட்டங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம் – திருப்போரூர் பேரூராட்சி, கோயம்புத்தூர் மாவட்டம்-காரமடை பேரூராட்சி, கடலூர் மாவட்டம் – சிதம்பரம் நகராட்சி, மதுரை மாவட்டம்-அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பேரூராட்சிகளில் 28 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள்; ஒரத்தநாடு, திருவையாறு, குரும்பலூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகளில் 5 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள்;

தமிழ்நாடு மூன்றாவது நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் 182 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிகுடிநீர் வழங்கல் திட்டம் (பகுதி-I);தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம்-ஒரத்தநாடு ஆகிய பேரூராட்சிகளில் 32 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டங்கள்; வேலூர் மாநகராட்சியில் 40 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டம்; உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டணத்தை 40 சதவீதம் குறைக்கும் நோக்கில் திருச்சிராப்பள்ளி, மதுரை மாநகர விரிவாக்கப்பகுதி, ஈரோடு, திருப்பூர், வேலூர், சேலம்ஆகிய மாநகராட்சிகள் மற்றும் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டலத்திற்கு உட்பட்ட 15 நகராட்சிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள 40 வாட்ஸ் குழல் தெருவிளக்குகளுக்கு மாற்றாக 52 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள 1,11,675 எல்இடி தெரு விளக்குகள்;

காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 4 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம்;பல்லவபுரம் மற்றும் தாம்பரம் நகராட்சி – வேங்கடமங்கலத்தில் 44 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம்;மதுரை மாநகராட்சி – மண்டலம் 2 மற்றும் 3, ஓசூர், மறைமலைநகர், ஆற்காடு,பவானி, தருமபுரி ஆகிய நகராட்சிகளில் 17 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள்; திசையன்விளை, சாம்பவர்வடகரைபேரூராட்சிகளில் 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக்கட்டடங்கள்; ஈரோடு மாநகராட்சி – பெரியசடையம்பாளையம் குட்டையில் 2 கோடிய50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் வெள்ள தடுப்புசுவர்;

சேலம் மாநகராட்சியில் 2 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மாநகராட்சிப் பள்ளி மற்றும் மணியனூரில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் அங்காடி; பள்ளிபாளையம், மேட்டூர், திருச்செங்கோடு மற்றும்கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய நகராட்சிகளில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயரி எரிவாயு கூடங்கள்; காரைக்குடி நகராட்சியில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கான குடியிருப்புகள்; முசிறி, கல்லக்குடி மற்றும் சுவாமிமலை ஆகிய பேரூராட்சிகளில் 32 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள்; தினமும் 200 பக்தர்கள் தங்கிபயன்பெறும் வகையில் சோளிங்கர் பேரூராட்சியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள யாத்திரிகர்கள் தங்கும் அறை; பனப்பாக்கம் பேரூராட்சியில் 40 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன இறைச்சிக் கூடம்; பள்ளிப்பட்டு, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய பேரூராட்சிகளில் 3 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையங்கள் என மொத்தம் 2559 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டு குடிநீர்திட்டங்கள், குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டம், மழைநீர்சேகரிப்பு கட்டமைப்பு, எல்.இ.டி. தெருவிளக்குகள், அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சி எல்லையில் 643 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ள 108.43 கிலோ மீட்டர் நீள பேருந்து தட சாலைகள் மற்றும் 683.02 கிலோ மீட்டர் நீள உட்புறச் சாலைகள் மேம்பாட்டுப் பணிகளை துவக்கி வைத்து சென்னை மாநகராட்சியின் சார்பில் 1093 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 260 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் மற்றும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 400 பேருந்து பயணிகள் நிழற்குடைகள்அமைப்பதற்கான பணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகராட்சி மேயர் .சைதை சா. துரைசாமி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன்,, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைமுதன்மைச் செயலாளர் .க.பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சிஆணையர் .விக்ரம் கபூர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் .சி.விஜயராஜ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் கோ.பிரகாஷ், பேரூராட்சிகளின் இயக்குநர் .க.மகரபூஷணம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.