தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைப்பு: கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா பதில்

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைப்பு: கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா பதில்

ஞாயிறு, மே 08,2016,

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் உள்ள 310 ஏரிகள், 63 அணைகள் மற்றும் அதன் நீர்வழங்கு வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டி கருணாநிதியும், திமுகவினரும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 14 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடிவடிக்கைகள் குறித்து நான் ஏற்கெனவே எனது அறிக்கைகளில் தெரிவித்திருந்தேன். தற்போது, மேலும் 3 துறைகளில் நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் உள்ள 310 ஏரிகள், 63 அணைகள் மற்றும் அதன் நீர்வழங்கு வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமம் அருகில் மருதையாற்றின் குறுக்கே ரூ.108 கோடியில் மருதையாறு நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் ரூ.40 கோடியே 55 லட்சத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கண்டலேறு-பூண்டி கால்வாய்களுக்கிடையே சரிந்த பல்வேறு பகுதிகள் ரூ.19 கோடியே 88 லட்சத்தில் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஆறு வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளை அவர்களது இல்லத்துக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் 32 மாவட்டங்களில் நடமாடும் சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 7 ஆயிரத்து 327 கோவில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பழமையான ஓவியங்களை தொல்லியல் துறை வல்லுநர்களையும் தொல்லியில் துறையில் இருந்து ஓய்வுபெற்ற வேதியியல் நிபுணர்களையும் கொண்டு பழமை மாறாது புதுப்பித்து பராமரிக்கப்படுவதில், முதல்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவில் 7 நிலை ராஜகோபுரத்தில் 5 நிலையில் உள்ள சுவர் ஓவியங்கள் தொன்மை மாறாது புதுப்பிக்கும் பணி முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள 2 நிலைகளுக்கு பணிகள் தொடங்கப்படவுள்ளன” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.