தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் ; ஆந்திர முதல்வரிடம் தமிழக முதல்வர் நேரில் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் ; ஆந்திர முதல்வரிடம்  தமிழக முதல்வர் நேரில் வலியுறுத்தல்

வெள்ளி,ஜனவரி 13,2017,

தமிழகம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு வழங்கவேண்டிய தண்ணீரைத் திறந்துவிடமாறு கோரிக்கை விடுப்பதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திரத் தலைநகர் அமராவதிக்கு சென்று அங்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபுவை சந்தித்து வலியுறித்தினார்.தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது குறித்து பரிசீலித்து சாதகமான முடிவு எடுக்க ஆந்திரம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

 வடகிழக்குப் பருவ மழை இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், மாநிலம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கத்தைவிட 57 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. வர்தா புயலின்போதுகூட பெரிய அளவில் மழை பெய்யவில்லை.சென்னை மாநகருக்கான குடிநீர் ஆதாரமாக திகழும் 4 ஏரிகளிலும் நீர் இருப்பு வெகுவாக குறைந்து உள்ளது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.057 டிஎம்சி- இல், இப்போது வெறும் 1.504 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. எனவே, தெலுங்கு – கங்கா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை ஆந்திரம் வழங்கவேண்டும்.

மேலும், 18-4-1983 அன்று போடப்பட்ட கிருஷ்ணா நீர் பங்கீடு ஒப்பந்தத்தின்படி, ஓர் ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தமிழக எல்லையை வந்தடையவேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் என இரண்டு கட்டங்களாக திறந்துவிடப்பட வேண்டும்.ஆனால், 2015-16 ஆம் ஆண்டில் தெலுங்கு – கங்கா திட்டத்தின் கீழ் எந்த தண்ணீரையும் தமிழகம் பெறவில்லை. 2016-17 ஆம் ஆண்டில் வெறும் 0.991 டிஎம்சி அடி தண்ணீர் மட்டுமே தமிழகம் பெற்றுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி, ஆந்திர அரசுக்கு இதுவரை ரூ. 687 கோடியை தமிழகம் வழங்கியுள்ளது. இந்தப் பணப் பரிவர்த்தனையில் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு விரைந்து தீர்வு காணுமாறு தமிழக அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தமிழக முதல்வர் கூறினார்.

மேலும், 11-1-2017 தேதியில் சோமசிலா அணையில் 34.81 டிஎம்சி அடி தண்ணீரும், கண்டலேறு அணையில் 13.24 டிஎம்சி அடி தண்ணீரும் இருப்பு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவது, சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாததாக உள்ளது. இந்த ஆண்டுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது என்பது மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. எனவே, கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 டிஎம்சி அடி தண்ணீராவது திறந்துவிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்திலும் மழைப் பொழிவு குறைந்திருந்தது. இருந்தபோதும், தமிழகத்தின் கோரிக்கை பரிசீலித்து சாதகமான முடிவு எடுக்கப்படும். இதுதொடர்பாக இரு மாநில அதிகாரிகளும் விரிவாக ஆலோசித்து உரிய தீர்வு காண்பதே சரியாக இருக்கும் என்றார்.

இந்தச் சந்திப்பின்போது, பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர அமைச்சர்கள் பிரதிபட்டி புல ராவ், கண்டா ஸ்ரீநிவாச ராவ், தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.