தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அணைப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்தக் கூடாது ; பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அணைப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்தக் கூடாது ; பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

திங்கள் , செப்டம்பர் 12,2016,

சென்னை : புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  அணை பாதுகாப்பு வரைவு மசோதா -2016 சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது என்றும், மாநில அரசுகளின் உரிமையை பாதிக்கும் இந்த மசோதாவை முன்னெடுத்து செல்லக்கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது.,

அணை பாதுகாப்பு மசோதா வரைவு-2016 குறித்து தாங்கள் நேரடியாக தலையிட வேண்டும். இந்த மசோதாவை இந்திய அரசின் நீர் ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்க அனுப்பியுள்ளது.

இந்த மசோதா கடந்த  2010-ம் ஆண்டு, லோக் சபாவில்  அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டது. அந்த நேரத்தில் நான் கடந்த 29-7-2011 மற்றும் 17-3-2012 ஆகிய தேதிகளில் அப்போதைய பிரதமருக்கு  நான் கடிதம் எழுதினேன். அதில், எங்களுக்கு  இந்த வரைவு மசோதாவில் உள்ள சில பிரிவுகள் குறித்து உள்ள ஆட்சேபத்தை தெரிவித்தோம். அந்த மசோதா காலாவதியாகி விட்டது. தற்போது மத்திய அரசு, புதிய மசோதாவை அறிமுகம் செய்ய விரும்புகிறது. முந்தைய மசோதா குறித்து என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் எதுவும் தற்போதைய வரைவு மசோதா தயாரிப்பில் பரிசீலிக்கப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

தேசிய சொத்துக்களாக உள்ள அணை பாதுகாப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. மாநில அரசுகள், அணைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பதில் மிகவும் கவனமாக உள்ளன.  அணை பாதுகாப்பை முறைப்படுத்துவது தொடர்பான சட்டம் கொண்டு வரும் போது, அது மாநில அரசின் பணிகள் மற்றும் உரிமைகளை பறிப்பதாக இருக்கக்கூடாது. இந்த விவரம் அரசியலமைப்பில் 7-வது அட்டவணையில் பட்டியல் II-ன்  17-வது அம்சத்தில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் இயற்றப்படும் புதிய சட்டம் இந்த எல்லை நிலைகளை கட்டாயம் மதிப்பதாக இருக்க வேண்டும்.

அணை பாதுகாப்பு குறித்து  மாநில சட்டமன்றங்களில் விதி 252 (1) ன் கீழ் தீர்மானம் நிறைவேற்றும் மாநிலங்கள் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர கோரலாம் என்பதுதான்  விதிமுறைகள் உள்ளன. ஆனால் நாடு முழுவதும் இந்த சட்டத்தை  கொண்டு வரும் நோக்கத்துடன் இருப்பதை போல தற்போதைய நடவடிக்கைகள் உள்ளன. தற்போதைய வரைவு மசோதாவில் மேற்கூறிய விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மாநில அரசுக்கு சொந்தமாகவும், அதன் பராமரிப்பிலும் உள்ள அணை நீர் தேக்க விஷயத்தில்  அதிகாரத்தை மீறும் வகையில் தேசிய அணை  பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு செய்யும் வகையில்  சட்டம் கொண்டு வருவது அரசியலமைப்பின் நிலைப்பாட்டிற்கு எதிரானதாகும்.

தமிழகத்திற்கு சொந்தமான முல்லை பெரியாறு, பரம்பிகுளம், துனக்கடவு மற்றும் பெரு வாரிபள்ளம் அணைகள் தமிழக அரசுக்கு சொந்தமானவை. அந்த அணைகள்   வேறு மாநிலதில் இருந்த போதும், மாநிலங்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில்   அவை உள்ளன. தமிழகத்திற்கு சொந்தமான அந்த அணைகள் குறித்த விவரங்களை  சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விவரங்கள் தற்போதைய வரைவு மசோதாவில் குறிப்பிடப்படவில்லை.

ஒரு அணை வேறு மாநிலத்தில் இருந்த போதும் அதற்கு சொந்தமான மாநிலம் மற்றும் அது பராமரித்தல், செயல்படுத்துதல் குறித்த விவரங்களும் அந்த அணைகளுக்கு சொந்தமான மாநில விவரமும் தற்போதைய மசோதாவில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

உத்தேசிக்ப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா 2016-ன் படி  அணையினை ஆய்வு செய்யவும்  சீரமைப்பு பணிகளை செய்யவும் அணை பாதுகாப்பு நிறுவனத்திற்கு அதிகாரம் அளிப்பதாக உள்ளது. இது 7-5-2014 அன்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பிற்கு எதிராக உள்ளது. முல்லை பெரியாறு அணை முற்றிலும் தமிழகத்திற்கு சொந்தமானது என்பதை அந்த தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது. அந்த அணையை பராமரித்தல் மற்றும் நிர்வகிக்கும் முழு உரிமையும் தமிழகத்திற்கு மட்டுமே உண்டு. அணை பாதுகாப்பு வரைவு மசோதா அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தமிழகத்திற்கு எதிரான இந்த அணை பாதுகாப்பு மசோதாவை முன்னெடுத்து செல்லக்கூடாது.

வரைவு மசோதா 2016-ல் மாநில அணை பாதுகாப்பு நிறுவனம், மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்யும் உரிமை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது ஏற்கமுடியாத ஒன்றாக உள்ளது.  உத்தேசித்துள்ள அணை பாதுகாக்கும் சட்டத்தை மறு ஆய்வு செய்யுறுமாறு நீர்வள அமைச்சகத்திற்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்த சட்டம் குறித்து தமிழக அரசு எழுப்பியுள்ள விஷயங்கள் குறித்து விவாதிக்காமல் அவரசமாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.