தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா ; சரத்குமார் பேச்சு

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா ; சரத்குமார் பேச்சு

திங்கள் , ஏப்ரல் 25,2016,

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ., திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சி.சீனிவாசனை ஆதரித்து, திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவருடன் அ.தி.மு.க. வேட்பாளர் சி.சீனிவாசன், மேயர் மருதராஜ் ஆகியோர் வேனில் வந்தனர்.

அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்பார். நான் இங்கே வந்ததும் சூரியன் மறைந்து மழை பெய்கிறது. ஒரு நாடு செழிப்பதற்கு மழை தான் நல்ல அறிகுறி.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலின் போது கொடுத்த 177 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்-அமைச்சர் அவர் தான். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றவும், மக்களுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

ஒரே ஹீரோ

அதேபோல் 110 விதிகளின் கீழ் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் இவர் மட்டுமே. எனவே, மீண்டும் அவரே முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். மற்ற கட்சிகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், சொல்லும் அளவுக்கு கட்சிகள் எதுவும் இல்லை. ஒருவர் மாற்றம் என்று சொல்லி வருகிறார். எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் ஒரே ஒரு ஹீரோ தான். அது நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. அவருடைய வெற்றி சின்னம் தான் இரட்டை இலை.

கடந்த 2011-ல் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்ற போது 3 ஆயிரம் மெகாவாட் மின்சார பற்றாக்குறை இருந்தது. ஆட்சிக்கு வந்ததும் சீரிய திட்டங்களை கொண்டு வந்து, பற்றாக்குறை நிலையை மாற்றி மின்மிகை மாநிலமாக உருவாக்கிய பெருமை நமது முதல்-அமைச்சரை சேரும். மக்களுக்காக தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியதோடு, தொழில் வளம் பெருகவும் சிந்தித்து திட்டங்களை நிறைவேற்றினார்.

மக்கள் நல கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக ஒருவரை அறிவித்து இருக்கிறார்கள். ஒரு நாட்டை, மக்களை வழிநடத்துவதற்கு அறிவு, திறமை, ஆற்றல் இருக்க வேண்டும். ஆனால், அங்கு இருப்பதாக தெரியவில்லை. காரணம் அவர் போர், யுத்தம் என்று கூறுகிறார். நான் ஏளனம் செய்யவில்லை. வைகோ ஆவேசம் அடைகிறார். எனவே, தமிழகம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை பெற வேண்டும் என்றால் மீண்டும் அ.தி.மு.க.வின் ஆட்சி அமைய வேண்டும்.

இதற்காக தான் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். கூட்டணி கட்சியினரும் கூட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதற்கு மக்கள் மீதும், வளர்ச்சி திட்டங்கள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையே காரணம். 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.