தமிழகம் உயர்கல்வித் துறையில் 44% வளர்ச்சி அடைந்துள்ளது : அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தமிழகம் உயர்கல்வித் துறையில் 44% வளர்ச்சி அடைந்துள்ளது : அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

வெள்ளி, ஆகஸ்ட் 26,2016,

தமிழகம் உயர்கல்வித் துறையில் 44 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உயர்கல்வித் துறை மூலம் அமைக்கப்பட்ட அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் 2016-17ஆம் ஆண்டிற்கான வகுப்புகளைத் துவக்கிவைத்து அவர் நேற்று  வியாழக்கிழமை பேசியதாவது:

கல்வியில் அனைவரும் சமநிலை பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கொடைக்கானலைத் தலைமை இடமாக கொண்டு அன்னை தெரசா பல்கலைக்கழத்தை 1984-இல் உருவாக்கினார்.

அப்போதைய கால கட்டத்தில் இந்தியாவில் மகளிருக்கு என உருவாக்கப்பட்ட மூன்றாவது பல்கலைக்கழகமாக அது அமைந்தது. அதன் பிறகு மகளிருக்கு என பல்வேறு பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட்டுள்ளன. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் 16 துறைகளுடன் செயல்பட்டு வருகிறது. மதுரை, நிலக்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் அதன் ஆய்வு விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து கோவையில் நான்காவது ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளுடன் இளநிலை ஆய்வு, கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இத்துடன் தமிழக அரசு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து காமன்வெல்த் அன்னை தெரசா மகளிர் அனைத்துலக மையம் செயல்பட்டு வருகிறது. சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் 110 விதிகளின் கீழ் உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு 12 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

தமிழகத்தில் 18 வயது முதல் 25 வயதுக்கு உள்பட்ட ஒரு லட்சம் பேருக்கு 37 கல்லூரி வீதம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் உயர்கல்வித் துறையில் 44 சதவீத அளவிற்கு வளர்ச்சி பெற்று முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் உயர்கல்வித் துறையின் மூலம் 953 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, ஏ.சண்முகம், கஸ்தூரி வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.