தமிழகம் போன்ற வளரும் மாநிலங்களுக்கு அணு சக்தி அவசியம் : கூடங்குளம் அணுஉலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

தமிழகம் போன்ற வளரும் மாநிலங்களுக்கு அணு சக்தி அவசியம் : கூடங்குளம் அணுஉலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு விழாவில் முதல்வர்  ஜெயலலிதா பேச்சு

வியாழன் , ஆகஸ்ட் 11,2016,

சென்னை: தமிழ்நாடு போன்ற வளரும் மாநிலங்களுக்கு அணுசக்தி அவசியம் என்று கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டை அர்ப்பணிக்கும் விழாவில் வீடியோ கான்பரன்சிங்கில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது, இந்தியா – ரஷ்யா இடையே உள்ள ஆழ்ந்த நட்புறவின் அடிப்படையில் உருவான நினைவு பொக்கிஷம் கூடங்குளம் அணுமின் நிலையம். அணு மின்சாரம் தூய்மையானது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதது, உறுதியான மின்சாரத்தை அளிக்கக்கூடியது. தமிழகம் போன்ற வேகமாக வளர்ந்து வரும் மாநிலம், அதிக வளர்ச்சி நிலை, வளத்தை பகிர்வு செய்தல், மற்றும் தேவை உள்ளவர்களுக்கு அணு மின்சாரம் தேவைப்படுகிறது.  கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டுக்கு அர்ப்பணிப்பது, இந்திய-ரஷ்ய நட்புறவு, ஒத்துழைப்பில் முக்கிய மைல் கல்லாகும்.

நான் தமிழகத்தின் முதல்வராக இருக்கும் காலத்தில் எப்போதும் கூடங்குளம் அணுமின் நிலையத்தினை  செயல்படுத்த முழு ஆதரவு அளித்துள்ளேன். அதே நேரத்தில் அணுமின் நிலையம் அமையும் இடத்தில் உள்ள உள்ளூர் மக்களின் அச்சத்தை தவிர்க்க வேண்டும் என்றும், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தன்மையை  அந்த மக்களுக்கு  தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். பாரம்பரியமான முறையில் மின்சாரத்தை தயாரிப்பதைக் காட்டிலும், அணு மின்சார உற்பத்திக்கு அதிக காலம் ஆகிறது. அணுமின் நிலையத்தின் பொறியியல் வளாகம் மட்டுமல்லாது  உச்ச பாதுகாப்பு தர நிலையும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இந்த அணு மின்சாரம் உற்பத்தியை வர்த்தக நிலையில் மேற்கொள்வதற்கு பல தடைகளான பொருளாதாரம், அரசியல், சமூகம், உலக, தேசிய மற்றும் உள்ளூர் நிலைகளை கடக்க வேண்டும்.

இந்த நிலையில்,  இந்த  கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை துவக்குவதில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் ரஷ்யா அரசுகள் உறுதியான கடமையுடன் செயல்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தினை வெற்றி கரமாக துவக்கியதன் மூலம், உள்ளூர் மக்களின் அச்சம், தடைகளை எவ்வாறு சமரசப்படுத்துவது என்பதற்கான  பாடமாக இந்த திட்டம் இருக்கும். கூடங்குளம் அணு மின்நிலையத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது. பாதுகாப்பு நிலைகள் உறுதிப்படுத்த வேண்டும்  என்பது அந்த உள்ளூர் மக்களின் நிலைப்பாடாகும். அவர்களின் பாதுகாப்பு எதிர்பார்ப்பு நிலைகள் குறித்து, அணுமின் நிலையம் மிகசிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது என்பது குறித்து தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டு, அவர்களின் அச்சம் நீக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் போராட்டம் காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட் செயல்படுவது தாமதமாகியுள்ளது. உள்ளூர் மக்களின் அச்ச நிலை உணர்வு பற்றி மத்திய அரசுக்கு நான்  கொண்டு சென்றேன். உள்ளூர் மக்களின் அச்ச நிலையை தவிர்க்க  நிபுணர் குழுவை மாநில அரசு கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைத்தது. அந்த கமிட்டி கூடங்குளம் மக்களின்  அச்ச நிலைகளை கேட்டு அவர்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை விளக்கி யது. நிபுணர் குழுவின் அறிக்கைப்படி, தமிழக அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தை மிக விரைவாக துவக்க கூடங்குளம் அருகாமையில் உள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தது.  எனது அரசு மேற்கொண்ட நம்பிக்கை மேம்பாடு நடவடிக்கைகள் காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்  தனது வர்த்தக உற்பத்தியை துவக்கியுள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதார ம் மற்றும் தொழிற்துறை, வேளாண்துறை தேவைகளுக்காக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது யூனிட்டை விரைவில் துவக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடைபிடிக்கப்படும் மிக உயரிய பாதுகாப்பு தர நிலைகளை உள்ளூர் மக்களுக்கு உறுதிபடுத்தியதில் தமிழக அரசு முக்கிய பங்காற்றி இருக்கிறது. இந்திய அணுமின் கழகம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில்  உயரிய பாதுகாப்பு நிலைகளை கடைபிடிக்கும் என்பதில் உறுதி கொண்டுள்ளேன். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல், 2-வது யூனிட்டுகளில் பசுமை மின் உற்பத்தியை மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலமே தமிழ்நாடும், அருகாமையில் உள்ள மாநிலங்களும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நம்பகமான ஆதார மின் நிலையமாக சார்ந்து  இருக்க முடியும்.

ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் மற்றும் ரஷ்ய மக்கள் ஆகியோர் தமிழக வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்புக்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டை ரஷ்ய அதிபருடன் கூட்டாக இணைந்து, இந்திய பிரதமர்  நாட்டுக்கு அர்ப்பணித்ததற்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்த அணுமின் நிலையத்தின் 2-வது யூனிட்டை விரைவில் துவக்க வேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.