தமிழகம் முழுவதும் விலையில்லா வேட்டி-சேலைகள் விநியோகம் தொடக்கம் :பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

தமிழகம் முழுவதும் விலையில்லா வேட்டி-சேலைகள் விநியோகம் தொடக்கம் :பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

சனி, ஜனவரி 02,2016,

தமிழகத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஏழை-எளிய மக்களுக்கு, விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே தொடங்கி வைத்துள்ள நிலையில், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கவும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும், 1983-ம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது – கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வருவாய் கிடைக்கும் வகையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். ஏழை-எளிய மக்களுக்கு, தரமான வேட்டி, சேலைகளை வழங்கிடும் நோக்கில், கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல், பாலிகாட் சேலைகளை வழங்கிடவும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு, அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு, 486 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 986 சேலைகளும், 1 கோடியே 67 லட்சத்து 89 ஆயிரத்து 404 வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்கெனவே தொடங்கி வைத்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கோவை மாவட்டம் குனியமுத்தூர் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி-சேலைகளை அமைச்சர் திரு. S.P. வேலுமணி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் திருமதி. அர்ச்சனா பட்நாயக் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் கைத்தறிநகர் பகுதியில், 3 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி-சேலைகளை அமைச்சர் மாநகராட்சி மேயர் திரு. ராஜன் செல்லப்பா வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கும் திட்டம் அரியலூரில் தொடங்கியுள்ளது. இதன்மூலம், 95,122 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 45 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோயில், மூலனூர் ஆகிய பகுதிகளில், சுமார் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி-சேலைகளை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வகுமார சின்னையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வழங்கினர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட விஜயபுரி ஊராட்சியில், முதலமைச்சர் ஆணைக்கிணங்க, சுமார் ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு, விலையில்லா வேட்டி-சேலைகளை அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாசலம் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேட்டி-சேலைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.