தமிழக அரசு வழங்கிய இலவச கறவை மாடுகள் மூலம் தினசரி 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல்

தமிழக அரசு வழங்கிய  இலவச கறவை மாடுகள் மூலம் தினசரி 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல்

வியாழன் , ஜனவரி 14,2016,

பொதுமக்களுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச கறவை மாடுகள் மூலம் 80 ஆயிரம் லிட்டர் பால் உள்பட தினசரி 30 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது.

இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுனில் பாலிவால் கூறியதாவது:–

ஆவின் பால்பண்ணை மற்றும் உற்பத்தியை பெருக்குவதற்கு கடந்த 4½ ஆண்டுகளில் தமிழக அரசு அதிகபட்சமாக ரூ.593 கோடி நிதி ஒதுக்கியது. கடந்த 2010–2011–ம் ஆண்டு 20.67 லட்சமாக இருந்த பால் கொள்முதல், 2015–2016–ம் ஆண்டு 30 லட்சத்தை எட்டி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 11.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதனை 13.5 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கிராமங்களில் தொடக்க கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரத்து 839 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்த இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆயிரம் கிராமங்களில் இருந்து தினசரி 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

அம்பத்தூர் பால்பண்ணையில் உள்ள பால்பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில், தினசரி 3 ஆயிரம் லிட்டர் பாலில் இருந்து ஐஸ்கிரீம், 7ஆயிரம் 500 லிட்டர் பாலில் இருந்து மோர், தயிர், லங்சி, நெய், பட்டர் மில்க், வெண்ணெய், சாக்லேட், பாதாம் பவுடர் போன்ற பொருட்கள் மற்றும் 100 கிலோ பன்னீர் பட்டர் மசாலா, 1 டன் பால்கோவா, 60 கிலோ பால் பேடா, 750 கிலோ மைசூர்பாகு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையம் ரூ.23 கோடியே 46 லட்சம் செலவில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி 2–வது வாரத்தில் திறக்கப்படுகிறது.

அதேபோல் புதிதாக ரூ.9.9 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய உற்பத்தி நிலையம் வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது.

பால்பொருட்களை விற்பனை செய்ய சென்னையில் 500 விற்பனை நிலையங்கள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 32 விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அதேபோல் 100 பள்ளி, கல்லூரிகளில் திறக்க முடிவு செய்யப்பட்டதில் 28 கல்லூரிகளில் ஆவின் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர 32 ஆவின் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 24 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது 14 கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. பால் பவுடர் உள்பட பல்வேறு பால்பொருட்களின் உற்பத்தி அதிகரித்திருப்பதால், விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பால்பவுடர் அரை கிலோ வாங்கினால் அரை கிலோ இலவசம் என்ற சலுகையும் வழங்கப்படுகிறது.

இதுதவிர கோவை மாவட்ட பால்பண்ணையின் கொள்திறனை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாகவும், மதுரை மாவட்ட பால்பண்ணை கொள்திறனை ரூ.14 கோடி மதிப்பில் 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாகவும் மாற்றும் பணி நடந்து வருகிறது. அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.36.28 கோடி மதிப்பில் 1 லட்சம் கொள்திறன் கொண்ட புதிய பால்பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது.

விருகம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஆவின் பொருட்கள் விற்பனை மையத்தை முதல்–அமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து அசோக் பில்லர், பெசன்ட்நகர், பாலவாக்கம், வண்ணான்துறை ஆகிய 4 இடங்களில் புதிய ஆவின் விற்பனை மையங்கள் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் ரூ.26 கோடி மதிப்பில் நவீனபால் உற்பத்தி செய்யும் மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.