தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

வெள்ளி, ஏப்ரல் 22,2016,

தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி இன்று தொடங்குகிறது. இதையொட்டி 234 தொகுதிகளிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-

தமிழக சட்டசபைக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 29-ம் தேதி வரைநடைபெறும் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை 30-ம் தேதி நடைபெறும். வேட்பு மனு வாபஸ் பெற மே மாதம் 2-ம் தேதி கடைசி நாள். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதற்கு முன்பு ஒரே தொகுதியில் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரிகள் அலுவலகம் இருந்தது. இதனால் ஒரே தொகுதியில் மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நிலை இருந்தது.

ஆனால் ஒரு தொகுதியின் தேர்தல் அதிகாரியின் அலுவலகம் அந்த தொகுதிக்குள் இருக்க வேண்டும். வேறு தொகுதியில் இருக்கக் கூடாது என்றும், அப்படி இல்லையென்றால் அந்த தொகுதியில் புதிதாக தேர்தல் அதிகாரி அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 234 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இருப்பார்கள். இதுதவிர தமிழகம் முழுவதும் 678 உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட உதவி தேர்தல் அதிகாரிகள் இருப்பார்கள். வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியிடமோ உதவி தேர்தல் அதிகாரியிடமோ வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்களை அனைத்து வேலை நாட்களிலும் தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை பெறுவதற்காக அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேரிடையாக சென்று பெற்றுக் கொள்ளலாம். அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேட்பு மனுவுடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் என்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். வேட்புமனுக்களை பூர்த்தி செய்வதில் விளக்கங்கள் தேவையென்றாலும் அதுபற்றி விளக்குவதற்கு தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.10 ஆயிரமும், தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.5 ஆயிரமும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். இந்த தொகையை பணமாகவோ, கருவூலத்திலோ செலுத்தலாம். அல்லது ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யலாம். ஆனால் அதற்கான ரசீதை வேட்பு மனுவோடு இணைத்திருக்க வேண்டும்.

தேர்தலின்போது வேட்பாளர்களின் புகைப்படம் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவு மையத்தின் வெளியில் ஒட்டுப்படும் பட்டியலில் இடம்பெறுவதற்காக, வேட்பாளர்கள், தங்களுடைய அண்மைக்கால புகைப்படத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவுடன் அளிக்க வேண்டும் என்று முதல்முறையாக இந்திய தேர்தல் ஆணையமானது உத்தரவிட்டுள்ளது.

புகைப்படம் 2 செ.மீ x 2.5 செ.மீ அஞ்சல்தலை அளவில் வண்ணத்திலோ கருப்பு, வெள்ளை நிறத்திலோ இருக்கலாம். புகைப்படத்தில் இயல்பான உடையில் இருக்க வேண்டும். சீருடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அனுமதிக்கப்பட மாட்டாது. குல்லாய், தொப்பிகள், அடர்வண்ணக் கண்ணாடிகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் அதுபற்றிய விவரங்கள் மற்றும் வேட்பாளரின் சொத்துகள் பற்றிய தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும். மேலும் இவற்றின் நகல்கள் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் ஏராளமான வாகனங்களுடன் ஊர்வலமாக செல்லக்கூடாது. தேர்தல் அதிகாரி அல்லது உதவி தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் வேட்பாளர் வாகனத்துடன் சேர்த்து 3 வாகனம் தான் வரவேண்டும். அதற்கு மேல் வாகனங்கள் வரக்கூடாது. அந்த 3 வாகனங்களின் செலவு கணக்கும் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். 3 வாகனங்களை தவிர கூடுதல் வாகனங்கள் 100 மீட்டர் சுற்றளவுக்கு வெளியே வந்தாலும் அந்த வாகனங்களுக்கான செலவும் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். இதேபோல வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளரையும் சேர்த்து 5 பேர் தான் தேர்தல் அதிகாரியின் அறைக்குள் செல்ல வேண்டும். அதற்கு மேல் செல்ல அனுமதி கிடையாது.

வேட்பு மனு தாக்கல் செய்பவர் தேர்தல் செலவுகள் செய்வதற்காக வங்கி கணக்கு தொடங்க வேண்டும். இந்த வங்கி கணக்கு குறைந்தபட்சம் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வங்கி கணக்கு விவரங்கள் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட வேண்டும். தேர்தலுக்கு செலவு செய்யப்படும் பணம் முழுவதும் அந்த வங்கி கணக்கு மூலமாகவே செய்யப்பட வேண்டும்.வேட்பாளரின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கலாம். அல்லது வேட்பாளரின் தேர்தல் ஏஜெண்டு பெயரில் தொடங்கப்படலாம். வேட்பாளரின் உறவினர் பெயரில் வங்கி கணக்கு தொடங்கக்கூடாது. வேட்பாளர் போட்டியிடும் மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் உள்ள வங்கியில் கணக்கு தொடங்கலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கியோ, கூட்டுறவு வங்கியோ, தபால் அலுவலகங்களிலோ கணக்கு தொடங்கலாம். வேட்பாளர் பெயரில் ஏற்கனவே உள்ள வங்கி கணக்கை தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடாது. புதிதாகத் தான் தொடங்கப்பட வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் தேர்தல் அதிகாரியின் அறைக்கு வெளியே வேட்பாளர் விரும்பினால் உறுதி மொழி எடுக்கலாம். அதாவது ‘தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன்’ என்ற வாசகம் அடங்கிய உறுதிமொழியை வேட்பாளர்கள் எடுக்கலாம். ஆனால் இது கட்டாயமில்லை. சட்டமன்ற தேர்தலையொட்டி முதல் கட்டமாக சிறப்பு பார்வையாளர்கள் 12 பேர் நேற்று முன்தினம் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் தவிர 234 தொகுதிகளுக்கும் 234 செலவின பார்வையாளர்கள், 117 பொது பார்வையாளர்கள், 32 போலீஸ் பார்வையாளர்கள், பறக்கும் படையில் இடம் பெறும் 118 பார்வையாளர்கள் ஆக மொத்தம் 501 மத்திய பார்வையாளர்கள் வருகிற 27-ந் தேதி முதல் தமிழகம் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் தவிர தமிழகத்தை சேர்ந்த நுண் பார்வையாளர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தமிழக தேர்தல் பணியில் 3 லட்சத்து 3 ஆயிரம் அரசு ஊழியர்களும், ஒரு லட்சம் போலீசாரும், தனியார் வீடியோகிராபர்கள், டிரைவர்கள், உதவியாளர்கள் 70 ஆயிரம் பேர் என மொத்தம் 4 லட்சத்து 73 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட தகுதி பெற்றவர்கள்.

இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர் தபால் ஓட்டுகள் மே மாதம் 5-ம் தேதி முதல் தகுதியுள்ளவர்களுக்கு அளிக்கப்படும். அவர்கள் அதை பூர்த்தி செய்து மே 6-ம் தேதி முதல் 18-ம் தேதி இரவு வரை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் நேரிடையாக சென்று போடலாம். அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.

தேர்தல் பணியில் ஈடுபடும் பெண்களை அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வகையில் நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.