தமிழக மீனவர்களைப் பாதிக்கும் சட்டம் : எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழக மீனவர்களைப் பாதிக்கும் சட்டம் : எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஜூலை ,8 ,2017 ,சனிக்கிழமை, 

சென்னை : எல்லை  தாண்டி  இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை கடந்து மீன்பிடித்தால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா, இந்திய மீனவர்களை குறிவைத்தே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீனவர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வுகாண இரு நாட்டு அரசுகளும் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு இது ஒரு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும். கடந்த 2015-ம் ஆண்டு முதல் இலங்கை சிறைகளில் 50 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதோடு, அந்நாட்டில் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 143 படகுகளும் இருப்பது குறித்தும், படகுகளை விடுவிக்க இலங்கை அரசு காலதாமதம் செய்வது குறித்தும் பிரதமரின் கவனத்திற்கு அடிக்கடி கொண்டு வந்திருப்பதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்ட மசோதா தமிழக மீனவ சமுதாயத்தினரிடையே வேதனையையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. பல நூற்றாண்டுகளாக பாக். நீரினைப் பகுதியில் மீன்பிடித்து வந்துள்ள தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை இலங்கையின் புதிய சட்டம் பறிப்பதாக அமைந்துள்ளது.எனவே, இந்த விவகாரம் குறித்து பிரதமர், வெளியுறவு அமைச்சகம் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். புதிய சட்டத்தில் இருந்து பாக். நீரிணைக்கு விலக்கு அளிக்க தேவையான சரத்துகளை இணைக்க வலியுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் பிரதமரை  கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.