தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை : பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை : பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

வெள்ளி,ஜனவரி 6,2017,

இலங்கைச் சிறையில் உள்ள 61 தமிழக மீனவர்களையும், 116 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொழும்பு நகரில் கடந்த ஜனவரி 2-ம் தேதி அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது துரதிருஷ்டவசமானது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு வெளியுறவுத் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள 61 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 116 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் நேற்று கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 2 விசைப் படகுகள் அடங்கும்.

மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு கைப்பற்றி விடுவதால், அவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே, மீனவர்கள் நலனை காக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.