தமிழக மீனவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் : பிரமதர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் :  பிரமதர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

திங்கட்கிழமை, ஜனவரி 9,2017,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலை ஏற்று மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 51 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், எதிர்பாராதவிதமாக அங்கிருந்து விடுவிக்கப்பட்ட 51 மீனவர்களும் தாயகம் வந்தடைவதற்கு முன்பாக, பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமையைப் பறிக்கும் வகையிலான அத்துமீறலில் இலங்கைக் கடற்படை மீண்டும் ஈடுபட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து கடலுக்குச் சென்ற 6 மீனவர்களையும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்திலிருந்து கடலுக்குள் சென்ற 4 மீனவர்கள் என மொத்தம் 10 மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது.
இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற தொடர் அத்துமீறல் நடவடிக்கைகள் மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகின்றன.
2016-ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படை இதுபோன்று 39 முறை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 290 மீனவர்கள் கைது செய்ப்பட்டதோடு, அவர்களுடைய 53 மீன்பிடி படகுகளையும் இலங்கை அபகரித்துக்கொண்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியின் காரணமாக, இந்த 290 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமாக இருக்கும் மீன்பிடி படகுகளையும், உபகரணங்களையும் இலங்கை அரசு விடுவிக்கவில்லை. இப்போது தமிழக ஏழை மீனவர்களுக்குச் சொந்தமான 118 படகுகள் இலங்கை வசம் உள்ளன. முறையான பராமரிப்பு, வடகிழக்கு பருவமழை, புயல் காரணங்களால் இந்தப் படகுகள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன.இதன் காரணமாகவே, இலங்கையால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்தியா – இலங்கை இடையேயான சர்வதேச கடல் எல்லைப் பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தொடர்பான 1974, 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் அதிமுக தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது என்பதையும் தங்களுக்கு நினைவுகூர விரும்புகிறேன்.
தமிழக மீனவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் அவர்களிடையே ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவிப்பது என்பது நீண்டகாலத் திட்டமாகும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ரூ. 1,650 கோடி நிதியை மத்திய அரசு விரைந்து அளிக்க வேண்டும்.
மேலும், இலைங்கை சிறைகளில் ஏற்கெனவே அடைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 20 மீனவர்களோடு ஞாயிற்றுக்கிழமை சிறைப்பிடிக்கப்பட்ட 10 மீனவர்களையும் விடுவிக்கவும், இலங்கை வசம் இருக்கும் தமிழக மீனவர்களின் 118 மீன்பிடி படகுகளை மீட்டுக் கொண்டுவருவதற்கும் தாமதமின்றி விரைவான நடவடிக்கை எடுக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தாங்கள் அறிவுறுத்தவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.